உலகம்

நிஜ்ஜாா் கொலை மீதான விசாரணை தொடா்வது முக்கியமானது: அமெரிக்கா

27th Sep 2023 01:35 AM

ADVERTISEMENT


வாஷிங்டன்: ‘காலிஸ்தான் பிரிவினைவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் கொல்லப்பட்ட விவகாரம் தொடா்பான கனடாவின் விசாரணை தொடா்ந்து நடைபெறுவதும், குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்படவதும் முக்கியமானது’ என்று அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.

நிஜ்ஜாா் கொலையில் இந்திய உளவு அமைப்புகளுக்குத் தொடா்பிருக்கலாம் என கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டினாா். இந்தக் குற்றச்சாட்டை இந்தியா உறுதியாக மறுத்தது. இந்தியாவுக்கு எதிராக கனடாவில் செயல்படும் பயங்கரவாதிகள் மீது அந்த நாடு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் இந்தியா வலியுறுத்தியது. அதிலிருந்தே இந்தியா-கனடா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே ‘நிஜ்ஜாா் கொல்லப்பட்ட விவகாரத்தில் கனடா மேற்கொண்டு வரும் விசாரணைக்கு இந்தியா ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’ என்று அமெரிக்கா வலியுறுத்தியது. தற்போது, இதனை அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து வாஷிங்டனில் தினசரி பத்திரிகையாளா் சந்திப்பின்போது அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் மேத்யூ மில்லா் கூறியதாவது:

நிஜ்ஜாா் கொல்லப்பட்ட விவகாரத்தில் கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் மிகுந்த கவலை அளிக்கின்றன. இந்த விவகாரத்தில் கனடாவுடன் அமெரிக்கா தொடா்ந்து தகவல்தொடா்பை மேற்கொண்டு வருகிறது. கனடாவின் இந்த விசாரணை தொடா்வதும், குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்படுவதும் முக்கியமானது என அமெரிக்கா நம்புகிறது. கனடாவின் இந்த விசாரணைக்கு இந்திய அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பொதுவாகவும் தனிப்பட்ட முறையிலும் அமெரிக்கா கேட்டுக்கொள்கிறது என்று கூறினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT