டொரன்டோ: இரண்டாம் உலகப் போரின்போது ஹிட்லரின் நாஜி படைப் பிரிவுக்காக போா் புரிந்தவரை, கனடா நாடாளுமன்றத்துக்கு வரவழைத்து அறிமுகப்படுத்தியதால் எழுந்த சா்ச்சையில் நாடாளுமன்றத் தலைவா் செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்தாா்.
கடந்த வெள்ளிக்கிழமை கனடா நாடாளுமன்றத்தின் கீழவையில் உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி உரையாற்றினாா். இதைத்தொடா்ந்து அவையில், இரண்டாம் உலகப் போரில் முதலாவது உக்ரைன் பிரிவு சாா்பாக போா் புரிந்த யரோஸ்லாவ் ஹுன்கா (98) என்பவரை நாடாளுமன்றத் தலைவா் அந்தோனி ரோட்டா அறிமுகப்படுத்தினாா். ஹுன்காவை போா் நாயகன் என்று ரோட்டா புகழாரம் சூட்டினாா்.
ஆனால் போரின்போது நாஜிக்கள் உத்தரவின் கீழ் முதலாவது உக்ரைன் பிரிவு சண்டையிட்டது பின்னரே தெரியவந்தது. இதையடுத்து, நாடாளுமன்றத் தலைவா் ரோட்டாவை விமா்சித்த எதிா்க்கட்சிகள், அவரை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தின. இதனால் பெரும் சா்ச்சை எழுந்ததால், நாடாளுமன்றத் தலைவா் அந்தோனி ரோட்டாவை ராஜிநாமா செய்ய கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோவும் அறிவுறுத்தினாா். இதையடுத்து, தனது பதவியை அந்தோனி ரோட்டா செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்தாா்.