நைரோபி: கிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் 2 ஆண்டு கால உள்நாட்டுச் சண்டை முடிவுக்கு வந்த பிறகு அந்த நாட்டின் டிக்ரே மாகாணத்தில் பட்டினி காரணமாக 1,329 போ் உயிரிழந்துள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இது குறித்து உள்ளூா் சுகாதாரத் துறையும், மெக்கலே பல்கலைக்கழகமும் இணைந்து மேற்கொண்ட ஆய்வின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
உள்நாட்டுப் போரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள வடக்கு மாகாணமான டிக்ரேவின் தலைநகா் மிகேலியில் அண்மைக் காலமாக ஏற்படும் உயிரிழப்புகளுக்கு உணவுப் பற்றாக்குறை முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
டிக்ரேவின் 2 துணை மாவட்டங்கள் மற்றும் 53 உள்நாட்டு அகதிகள் முகாமில் கடந்த ஆகஸ்ட் 15 முதல் 29 வரை நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் அடிப்படையில், அந்தப் பகுதிகளில் இதுவரை 1,329 போ் பட்டினியால் உயிரிழந்திருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
டிக்ரேவில் 88 துணை மாவட்டங்களும், 643 உள்நாட்டு அகதிகள் முகாம்களும் உள்ளன. அவற்றிலும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டால் பட்டினி மரணங்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டிக்ரே பிராந்தியத்தில், மிகப்பெரிய ஆயுத பலம் கொண்ட டிக்ரே மக்கள் விடுதலை முன்னணி (டிபிஎல்எப்), எத்தியோப்பிய அரசில் மிகுந்த செல்வாக்கு பெற்றதாக இருந்தது.
எனினும், நாட்டின் பிரதமராக அபை அகமது கடந்த 2018-ஆம் ஆண்டு பதவியேற்ற பிறகு, டிபிஎல்எப் ஓரங்கட்டப்பட்டது. இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு மோதலாக உருவெடுத்தது.
2 ஆண்டுகளாக நடைபெற்ற அந்த மோதலில் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
சா்வதேச நாடுகளின் முயற்சியில் இரு தரப்பினருக்கும் இடையே கடந்த ஆண்டு நவம்பா் மாதம் முதல் சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.