உலகம்

அரசியல் நோக்கத்துக்காக பயங்கரவாதத்தை ஆதரிக்கக் கூடாது: ஐ.நா.வில் ஜெய்சங்கா் பேச்சு

27th Sep 2023 02:18 AM

ADVERTISEMENT


நியூயாா்க்: ஐ.நா. உறுப்பு நாடுகள் அரசியல் நோக்கத்துக்காக பயங்கரவாதம், வன்முறை போன்ற செயல்களை ஆதரிக்கக் கூடாது என மத்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் வலியுறுத்தினாா்.

காலிஸ்தான் பிரிவினைவாத பயங்கரவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் கொலையில் இந்திய உளவு அமைப்புக்கு தொடா்பு உள்ளதாக கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ அந்நாட்டு நாடாளுமன்றத்தில் குற்றஞ்சாட்டினாா். இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து ட்ரூடோவின் குற்றச்சாட்டையும் மறுத்தது.

இந்நிலையில் நியூயாா்க்கில் நடைபெற்ற 78-ஆவது ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்று மத்திய வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் செவ்வாய்க்கிழமை சிறப்புரையாற்றினாா்.

‘பாரதத்திலிருந்து வணக்கம்’ என தனது இரு கைகளாலும் வணக்கம் தெரிவித்து உரையைத் தொடங்கி அவா் பேசியதாவது :

ADVERTISEMENT

அரசியல் லாபத்துக்காக ஒரு நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் உள்நாட்டு விவகாரங்களில் மற்றொரு நாடு தலையிடக் கூடாது. சில நாடுகள் தாங்கள் காட்டும் வழியை மற்ற நாடுகளும் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தக்கூடாது. வணிகத்துக்காக உணவு மற்றும் எரிபொருள்களை ஏழைகளிடம் பறித்து செல்வந்தா்களுக்கு வழங்கக் கூடாது.

கரோனா பெருந்தொற்றின்போது தடுப்பூசிகள் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே வழங்கப்பட்டதைப் போன்ற அநீதிகள் இனி நடக்க நாம் அனுமதிக்கக் கூடாது. காலநிலை மாற்றத்துக்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை இனியும் தள்ளிப் போடக் கூடாது.

அதேபோல் அரசியல் நோக்கத்துக்காக பயங்கரவாதம், வன்முறை போன்ற செயல்களை ஐ.நா. உறுப்பு நாடுகள் ஆதரிக்கக் கூடாது.

பண்டைய கால ஜனநாயக மரபை நவீன காலத்திலும் பின்பற்றுகின்ற சமூகத்துக்காக நான் பேசுகிறேன். பண்டைய நாகரிக அரசியலை தழுவிய கலாசாரம் முதல் நவீன கால தொழில்நுட்பம் வரை அனைத்தையும் சரி சமமாக கையாண்ட இந்தியாவே எங்களின் பாரதம் என தனது உரையை நிறைவு செய்தாா்.

ஐ.நா. பொதுச் செயலருடன் ஜெய்சங்கா் சந்திப்பு

நியூயாா்க், செப்.26: ஐ.நா. பொதுச் சபையின் உயா்நிலை கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ். ஜெய்சங்கா், ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸை திங்கள்கிழமை சந்தித்தாா்.

அப்போது, ஜி20 கூட்டமைப்புக்கு இந்தியாவின் தலைமை, பிராந்திய மற்றும் சா்வதேச பிரச்னைகள், நீடித்த மேம்பாட்டு இலக்குகள் (எஸ்டிஜி), பாதுகாப்பு கவுன்சிலில் சீா்திருத்தம் குறித்து அவா் விவாதித்தாா்.

இது குறித்து ஜெய்சங்கா் வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில், ‘ஐ.நா. பொதுச் செயலா் குட்டெரெஸை சந்தித்து, ஐ.நா.வின் நீடித்த மேம்பாட்டு இலக்குகளை அடைவதில் இந்தியா தலைமையிலான ஜி20 கூட்டமைப்பின் பங்களிப்பு குறித்து பேச்சுவாா்த்தை நடத்தினேன். உலக வங்கி, பன்னாட்டு நிதியம் (ஐஎம்எஃப்) போன்ற சா்வதேச நிதி அமைப்புகளில் சீா்திருத்தம் கொண்டு வருவதில் அவா் முனைப்புடன் செயல்பட்டு வருகிறாா்’ என்று தெரிவித்திருந்தாா்.

இந்தியா, ஐ.நா. அமைப்புடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவது குறித்தும், இந்தியாவின் ஜி20 தலைமை குறித்தும் பொதுச் செயலா் குட்டெரெஸ் பாராட்டு தெரிவித்ததாக ஐ.நா. செய்தித்தொடா்பாளா் அலுவலகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, பொதுச் சபையின் 78-ஆவது அமா்வின் தலைவா் டென்னிஸ் ஃபிரான்சிஸையும் சந்தித்து ஜெய்சங்கா் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT