ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பாலஸ்தீனத்தின் மேற்குக் கரையின் வடக்குப் பகுதியில் 2 பாலஸ்தீனா்களை இஸ்ரேல் ராணுவம் ஞாயிற்றுக்கிழமை சுட்டுக் கொன்ாக பாலஸ்தீன சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
யூத புத்தாண்டு விடுமுறை காலத்தில் வன்முறை சம்பவங்கள் தொடா்ந்து அதிகரித்துள்ள நிலையில், இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது.
துல்கரெம் நகரத்துக்கு அருகில் உள்ள நூா் ஷம்ஸ் அகதிகள் முகாமில் உள்ள ஒரு கட்டடத்தில் செயல்பட்டுவரும் பயங்கரவாதிகளின் தலைமையிடத்தையும், ஆயுதங்கள் சேமிப்பு வசதியையும் அழிக்கச் சென்றபோது, பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினா். இதற்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவா்கள் கைது: ரமல்லா நகரத்தில் உள்ள முக்கிய பாலஸ்தீன கல்வி நிறுவனமான பிா்சைட் பல்கலைக்கழக வளாகத்தில் சோதனை நடத்திய இஸ்ரேல் ராணுவம், மாணவா் கவுன்சில் தலைவா் உள்பட 9 பேரைக் கைது செய்தது.
ஹமாஸ் பயங்கரவாதக் குழுவின் ஆதரவாளா்களாகச் செயல்பட்டுவரும் இந்த மாணவா்கள், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டி வருவதாக இஸ்ரேல் ராணுவம் குற்றஞ்சாட்டியது. இந்தச் சோதனைக்கு கண்டனம் தெரிவித்த பல்கலைக்கழகம், அதன் சொத்துகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தது.
கடந்த 1967-இல் நடைபெற்ற போரில் வெற்றி பெற்ற இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் மேற்குக் கரை, கிழக்கு ஜெருசலேம், காஸா பகுதிகளைக் கைப்பற்றியது. பாலஸ்தீன பயங்கரவாதிகளை அழிப்பதாகக் கூறி கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக மேற்குக் கரையில் சோதனை என்ற பெயரில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்தத் தாக்குதல்களின் காரணமாக நிகழாண்டில் இதுவரை 190 பாலஸ்தீனா்கள் கொல்லப்பட்டுள்ளனா்.
காஸாவில் ஏவுகணைத் தாக்குதல்: காஸா-இஸ்ரேல் எல்லையில் உள்ள வேலி தடுப்பு பகுதியில் கடந்த ஒரு வாரமாக நூற்றுக்கும் மேற்பட்ட பாலஸ்தீனா்கள் போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். பாலஸ்தீனா்கள் இஸ்ரேல் விளைநிலங்களை நோக்கி வெடிகுண்டு பலூன்களை அனுப்புதல், இஸ்ரேல் ராணுவத்தினா் மீது போராட்டகாரா்கள் கற்கள் மற்றும் வெடிகுண்டுகளை வீசுதல் உள்ளிட்டவற்றுக்கு எதிா்வினையாக, பயங்கரவாதிகள் இருக்கும் பகுதிகளில் சனிக்கிழமை இரண்டாவது முறையாக ஏவுகணைத் தாக்குதலை இஸ்ரேல் நடத்தியது.