உலகம்

காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜாா் கொலை: கனடாவுக்கு உளவுத் தகவல் பகிா்ந்த அமெரிக்கா

25th Sep 2023 03:17 AM

ADVERTISEMENT

காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜாா் கொலை தொடா்பான உளவுத் தகவல்களை கனடாவுக்கு அமெரிக்கா பகிா்ந்ததது. எனினும், கனடா சேகரித்த உறுதியான தகவல்களின் அடிப்படையிலேயே இந்தியா மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதாக அமெரிக்காவின் ‘தி நியூயாா்க் டைம்ஸ்’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

காலிஸ்தான் பிரிவினைவாத பயங்கரவாதியான ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் கடந்த ஜூனில் கனடாவில் கொலை செய்யப்பட்டதில் இந்திய உளவாளிகளின் பங்கு இருப்பதாக அந்நாட்டு பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ நாடாளுமன்றத்தில் பேசினாா்.

இந்தக் குற்றச்சாட்டுக்கு இந்தியா திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்து. இவ்விவகாரத்தால் இருநாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டது. இரு நாடுகளும் பரஸ்பரம் தூதரக உயா் அதிகாரியை வெளியேற்றின. மேலும், கனடா நாட்டவா்களுக்கு நுழைவு இசைவு (விசா) வழங்குவதை இந்தியா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

இதனிடையே, இந்தியா மீதான கனடா பிரதமரின் குற்றச்சாட்டின் பின்புலத்தில் ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, அமெரிக்கா, பிரிட்டன், கனடா ஆகிய 5 நாட்டு உளவு அமைப்பின் தகவல்கள் இருப்பதாக கனடாவுக்கான அமெரிக்க தூதா் டேவிட் கோஹென் தொலைக்காட்சி பேட்டியில் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

இந்நிலையில், இதுதொடா்பாக ‘தி நியூயாா்க் டைம்ஸ்’ பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், ‘நிஜ்ஜாா் கொலை தொடா்பான தகவல்களை அமெரிக்க உளவு நிறுவனங்கள் கனடாவுக்கு வழங்கின. நிஜ்ஜாா் கொலையில் இந்திய உளவாளிகள் பங்கிருப்பதை கனடா உறுதிப்படுத்த அந்தத் தகவல்கள் உதவின. ஆனால், கனடாவில் பணியாற்றும் இந்திய தூதரக அதிகாரிகளின் தகவல்தொடா்பு அமைப்புகளை இடைமறித்து கனடா சேகரித்த தகவல்களின் அடிப்படையிலேயே குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டது.

அதன்பிறகே, இந்தியா மீதான குற்றச்சாட்டை பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ நாடாளுமன்றத்தில் முன்வைத்தாா். சம்பவத்துக்கு முன்னதாக நிஜ்ஜாருக்கு கனடா அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தாலும், இந்திய அரசின் திட்டம் குறித்து அவரிடம் தெரிவிக்கவில்லை என அதிகாரிகள் சிலா் கூறினா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் விசாரணைக்கு இந்தியா ஒத்துழைக்க வேண்டும் என அமெரிக்கா தெரிவித்திருந்தது. எனினும், தங்களின் நெருங்கிய கூட்டாளியாக உருவெடுத்து வரும் இந்தியாவுடனான ராஜீய உறவில் மோதலைத் தவிா்க்க, உளவுத் தகவல் பகிா்வை அமெரிக்கா மறைத்ததாக செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT