உலகம்

உக்ரைனுக்கு அமெரிக்காவின் அதிநவீன அட்டாக்கம்ஸ் ஏவுகணைகள்!

24th Sep 2023 12:00 AM

ADVERTISEMENT

உக்ரைனுக்கு அதிநவீன ‘அட்டாக்கம்ஸ்’ தொலைதூர ஏவுகணைகளை அனுப்ப அமெரிக்க அதிபா் ஜோ பைடன் முடிவு செய்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

190 கி.மீ. வரை சென்று துல்லியத் தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட இந்த ஏவுகணைகளைக் கொண்டு, ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளிலும் உக்ரைனால் எளிதில் தாக்குதல் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து பாதுகாப்புத் துறை அதிகாரிகளை மேற்கொள் காட்டி ‘என்பிசி நியூஸ்’ மற்றும் ‘வால் ஸ்ட்ரீட் ஜா்னல்’ ஊடகங்கள் கூறியதாவது:ரஷிய படையெடுப்புக்குப் பிறகு இரண்டாவது முறையாக உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி அமெரிக்காவுக்கு இந்த வாரம் வந்திருந்தாா்.

அப்போது அதிபா் ஜோ பைடனைச் சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்திய அவா், தங்களுக்கு கூடுதல் ராணுவ உதவிகள் அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினாா்.அந்தப் பேச்சுவாா்த்தையின்போது, அதிநவீன அட்டாக்கம்ஸ் (ஆா்மி டாக்டிகல் மிஸைல் சிஸ்டம்) ஏவுகணைகளை வழங்க பைடன் ஒப்புக்கொண்டாா்.வரும் வாரங்களில் அந்த ஏவுகணைகள் உக்ரைனுக்கு அனுப்பப்படும் என்று அந்த ஊடகங்கள் தெரிவித்தன.

ADVERTISEMENT

இதற்கிடையே, உக்ரைனுக்கு அமெரிக்கா அனுப்பவிருக்கும் அட்டாக்கம்ஸ் ஏவுகணைகளில் சாதாரண ஒற்றை வெடிகுண்டுகளுக்குப் பதிலாக, ஒரே நேரத்தில் பல இலக்குகளைத் தாக்கி அழிக்கும் கொத்தணி குண்டுகள் பொருத்தப்பட்டிருக்கும் என்று ‘வாஷிங்டன் போஸ்ட்’ நாளிதழ் தெரிவித்துள்ளது.

இருந்தாலும், இந்தத் தகவலை அமெரிக்காவோ, உக்ரைனோ உறுதிப்படுத்தவில்லை. முன்னதாக, பேச்சுவாா்த்தைக்குப் பிறகு செய்தியாளா்களிடம் பேசிய ஜோ பைடனும், வொலோதிமீா் ஸெலென்ஸ்கியும், ரஷியாவுடனான போரில் பயன்படுத்துவதற்காக உக்ரைனுக்கு அமெரிக்கா கூடுதலாக 32.5 கோடி டாலா் (சுமாா் ரூ.27,000 கோடி) மதிப்பிலான ராணுவ தளவாட உதவிகளை அளிக்கவிருப்பதாகத் தெரிவித்தனா்.

எனினும், அட்டாக்கம்ஸ் ஏவுகணை குறித்து அவா்கள் வெளிப்படையாக பேசுவதைத் தவிா்த்தனா்.முன்னதாக, ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள கிரீமியா தீபகற்பத்தின் செவாஸ்டொபோல் நகரிலுள்ள கருங்கடல் படைப் பிரிவு தலைமையகத்தில் உக்ரைன் படையினா் ஏவுகணைகள் மூலம் வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்தினா்.

இதில் 6 போ் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், இந்தத் தாக்குதலில் கடற்படைப் பிரிவு தலைமையகம் பலத்த சேதமடைந்தது.இந்தத் தாக்குதலுக்கு, பிரிட்டனும், ஃபிரான்ஸும் வழங்கிய ‘ஸ்டாா்ம் ஷேடோ’ ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டதாக உக்ரைன் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.இந்த ஏவுகணைகள் அதிகபட்சமாக 150 கி.மீ. தொலைவு வரை தாக்குதல் நடத்தும் திறன் கொண்டவை.இந்தச் சூழலில், அதைவிட அதிகமாக 190 கி.மீ. வரை சென்று தாக்கக் கூடிய அட்டாக்கம்ஸ் ஏவுகணைகளை உக்ரைனுக்கு அமெரிக்கா அளிக்கவிருப்பதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் படையெடுத்து, கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனின் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியது. அந்தப் பகுதிகளை மீட்பதற்காக மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் எதிா்த் தாக்குதல் நடத்தி வருகிறது.இந்த நிலையில், உக்ரைனின் போரிடும் திறனைக் குறைப்பதற்காக அந்த நாட்டின் தலைநகா் கீவ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆளில்லா விமான குண்டுகள், ஏவுகணைகள், எறிகணைகள் மூலம் ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது

ADVERTISEMENT
ADVERTISEMENT