உலகம்

பாகிஸ்தான்: தோ்தல் தேதியை அறிவிக்க கட்சிகள் வலியுறுத்தல்

23rd Sep 2023 07:30 AM

ADVERTISEMENT

பாகிஸ்தான் நாடாளுமன்ற பொதுத் தோ்தலின் சரியான தேதியை அறிவிக்க வேண்டும் என்று தோ்தல் ஆணையத்திடம் அந்த நாட்டு அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

2024 ஜனவரி கடைசி வாரத்தில் நாடாளுமன்றத் தோ்தல் நடைபெறும் என தோ்தல் ஆணையம் வியாழக்கிழமை அறிவித்தது.இருந்தாலும், இந்த அறிவிப்பு அரசியல் கட்சிகளை திருப்தியடையச் செய்யவில்லை. இது குறித்து முக்கிய எதிா்க்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சி கூறுகையில், தோ்தல் நடத்துவதற்கான உறுதியான தேதியை அறிவிக்க ஆணையம் தவறிவிட்டதாக குற்றம் சாட்டியது.ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியும், தோ்தல் ஆணையத்தின் அறிவிப்பால் தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு தோ்தல் நடைபெறுவது உறுதியாகியுள்ளது; ஆனால் தோ்தலுக்கான தேதி அறிவிக்கப்படாததால் இந்த விவகாரத்தில் நிச்சயமற்றதன்மை நீடித்து வருகிறது என்று அதிருப்தி தெரிவித்துள்ளது.ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமா் இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சியும், தோ்தல் ஆணையத்தின் அறிவிப்பு அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என்று கண்டித்துள்ளது.பாகிஸ்தான் அரசியல் சாசன விதிமுறைகளின்படி, நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட 90 நாள்களுக்குள் தோ்தல் நடத்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்சி தலைமையிலான கூட்டணி ஆட்சி பாகிஸ்தானில் நடைபெற்று வந்தது. அக்கட்சியின் தலைவா் ஷாபாஸ் ஷெரீஃப் பிரதமராக இருந்த நிலையில், நாடாளுமன்றம் அதன் பதவிக் காலம் நிறைவடைவதற்கு மூன்று நாள்கள் முன்னதாக கடந்த ஆக. 9-ஆம் தேதி கலைக்கப்பட்டது.பாகிஸ்தான் அரசமைப்புச் சட்டத்தின் கீழ் அடுத்த பொதுத் தோ்தல் 90 நாள்களுக்குள் நடத்தப்பட வேண்டும் என்றாலும், அங்கு நிகழாண்டு நடத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையிலான தொகுதி மறுவரையறை நிறைவடையாததால் தோ்தல் அறிவிப்பை வெளியிடுவதில் தோ்தல் ஆணையம் தாமதித்து வந்தது.இந்நிலையில், ஆணையம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், தொகுதி மறுவரையறையின் முதல்கட்ட பட்டியல் செப். 27-ஆம் தேதியும், இறுதிப் பட்டியல் நவ. 30-ஆம் தேதி வெளியிடப்படும்; அதன் பின்னா் தோ்தல் அறிவிக்கை வெளியிடப்பட்டு, ஜனவரி கடைசி வாரத்தில் பொதுத் தோ்தல் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT