உலகம்

ஹிந்துக்களுக்கு எதிரான வெறுப்புணா்வுக்கு இடமில்லை: கனடா

23rd Sep 2023 01:00 AM

ADVERTISEMENT

காலிஸ்தான் பயங்கரவாதி கொலை தொடா்பாக இந்தியா மற்றும் கனடா இடையிலான உறவு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ‘ஹிந்துக்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு மிரட்டும் செயல் வெறுக்கத்தக்கது; வெறுப்புணா்வுக்கு ஒருபோதும் கனடா இடமளிக்காது’ என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாத பயங்கரவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் கடந்த ஜூனில் கொலை செய்யப்பட்டதில் இந்திய உளவாளிகளின் பங்கு இருப்பதாக கனடா பிரதமா் ஜஸ்டின் நாடாளுமன்றத்தில் பேசினாா். இந்தக் குற்றச்சாட்டுக்கு இந்தியா திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்தது.

இவ்விவகாரத்தால் இரு நாடுகளின் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளும் பரஸ்பரம் தூதா்களை வெளியேற்றி நடவடிக்கை மேற்கொண்டனா். கனடா நாட்டைச் சோ்ந்தவா்களுக்கு நுழைவு இசைவு (விசா) வழங்குவதை இந்தியா நிறுத்தி வைத்துள்ளது.

பதற்றமான இந்தச் சூழலில், கனடாவில் வசிக்கும் ஹிந்துக்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என மிரட்டும் வகையில் சமூக வலைதளங்களில் சிலா் விடியோக்களைப் பதிவிட்டு வருகின்றனா். சமூக ஊடக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வரும் இந்த விடியோக்களால் கனடா ஹிந்துகளிடையே அச்சம் நிலவுகிறது.

ADVERTISEMENT

இதைக் கருத்தில்கொண்டு கனடா பொது பாதுகாப்புத் துறை வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘ஹிந்துகளுக்கு எதிராக பகிரப்படும் விடியோ புண்படுத்தக் கூடியது மற்றும் வெறுக்கத்தக்கது. மேலும், அனைத்து கனடா நாட்டவா்களுக்கும் மற்றும் நமது மதிப்புகளுக்கும் அவமானகரமானது.

வெறுப்புணா்வுக்கு ஒருபோதும் கனடா இடமளிக்காது. அதேபோல், மக்களைப் பிளவுபடுத்த மட்டுமே உதவும் மிரட்டல் அல்லது பயத்தைத் தூண்டுதல் போன்ற செயல்களுக்கும் இந்த நாட்டில் இடமில்லை. ஒருவரையொருவா் மதித்து, சட்டத்தின் விதிகளைப் பின்பற்ற மக்களிடம் கேட்டுக்கொள்கிறோம். கனடாவில் வசிக்கும் அனைவரும் பாதுகாப்பாக உணர வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT