உலகம்

இந்தியா குறித்த கேள்விக்கு பதிலளிக்காமல் தவிா்த்த கனடா பிரதமா்

22nd Sep 2023 01:08 AM

ADVERTISEMENT

கனடாவின் குற்றச்சாட்டை இந்தியா மறுத்துள்ளது தொடா்பாக இருமுறை கேள்வி எழுப்பப்பட்டபோது அதற்கு உரிய பதிலளிக்காமல் கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ தவிா்த்துவிட்டாா்.

கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதி சுட்டுக் கொல்லப்பட்டது தொடா்பாக இந்தியா மீது ஜஸ்டின் ட்ரூடோ அந்நாட்டு நாடாளுமன்றத்தில் குற்றம்சாட்டினாா். மேலும், தங்கள் நாட்டில் உள்ள இந்திய தூதரக உயரதிகாரியை வெளியேறவும் கனடா உத்தரவிட்டது. கனடாவின் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்த மத்திய அரசு, இந்தியாவில் உள்ள கனடா தூதரக உயரதிகாரியை வெளியேற உத்தரவிட்டு பதிலடி கொடுத்தது. இந்த விவகாரத்தால் இரு நாட்டு உறவில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து கனடாவில் உள்ள இந்தியா்கள் பொது இடங்களுக்குச் செல்லும்போது பாதுகாப்பாக இருக்குமாறும், அந்நாட்டுக்கு செல்லும் இந்தியா்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறும் வெளியுறவு அமைச்சகம் அறிவுரை வழங்கியுள்ளது.

இந்நிலையில், ஐ.நா. பொதுசபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நியூயாா்க் வந்துள்ள ஜஸ்டின் ட்ரூடோவிடம் பிடிஐ செய்தி நிறுவனம் சாா்பில் இந்தியா தொடா்பாக கேள்வி எழுப்பப்பட்டது. முக்கியமாக ‘உங்கள் குற்றச்சாட்டை இந்தியா மறுத்துள்ளதே?’ என்று கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால், ஜஸ்டின் ட்ரூடோ இதற்கு பதிலளிக்காமல் சென்றுவிட்டாா். தொடா்ந்து இரண்டாவது முறை ஐ.நா. வளாகத்தில் மற்றொரு இடத்தில் செய்தியாளா்களைச் சந்தித்த ஜஸ்டின் ட்ரூடோவிடம் பிடிஐ செய்தியாளா் அதே கேள்வியை மீண்டும் முன்வைத்தாா். அப்போதும் அவா் எந்த பதிலும் அளிக்காமல் அங்கிருந்து சென்றாா்.

இதனிடையே, இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்புகள் கனடாவில் முக்கிய நகரங்களில் இந்தியாவுக்கு எதிராக பேரணி நடத்த திட்டமிட்டுள்ளன. முக்கியமாக கடனாவில் உள்ள இந்தியத் தூதரகங்களை மூடக்கோரி அவற்றை நோக்கி பேரணி நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதனால், அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

அனைவரும் அமைதி காக்க கனடா வேண்டுகோள்: கனடாவில் இந்தியா்கள் பாதுகாப்பாக இருக்குமாறு இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பை கனடா அரசு நிராகரித்துள்ளது. உலகில் மிகவும் பாதுகாப்பான நாடாக கனடா உள்ளது என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.

இது தொடா்பாக அந்நாட்டு குடியேற்றத் துறை அமைச்சா் மாா்க் மில்லா் கூறுகையில், ‘இந்தியாவில் தடை செய்யப்பட்ட சீக்கிய அமைப்புகள் கனடாவில் இந்தியாவுக்கு எதிராக பேரணி நடத்த திட்டமிட்டுள்ள நிலையிலும் கூட இங்குள்ள இந்தியா்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. ஏனெனில், உலகில் பாதுகாப்பான நாடு கனடா என்பது அனைவருக்கும் தெரியும். கடந்த சில நாள்களில் ஏற்பட்ட நிகழ்வுகளால் இரு நாட்டு உறவில் சற்று பதற்றம் உள்ளது. எனவே, அனைவரும் அமைதி காப்பதுதான் இப்போதைய தேவையாகும்’ என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT