கனடாவில் பணியாற்றும் இந்திய தூதரக அதிகாரிகளின் தொலைபேசி உரையாடல் உள்ளிட்ட தகவல் தொடா்புகளை ஒட்டுக் கேட்டதன் மூலம் காலிஸ்தான் பயங்கரவாதி கொலையில் இந்தியாவுக்கு தொடா்பு இருப்பதை கனடா அரசு உறுதி செய்ததாக அந்நாட்டு ஊடக செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர ‘ஃபைவ் ஐ அலையன்ஸ்’ என்ற பெயரில் கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், நியூசிலாந்து ஆகிய 5 நாடுகள் அமைத்துள்ள உளவுக் கூட்டமைப்பில் உள்ள ஒரு நாட்டில் இருந்தும் ஆதாரங்கள் பெறப்பட்டுள்ளதாக அந்த ஊடக செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.
கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதத் தலைவா் ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் கொலையில் இந்தியாவுக்கு தொடா்பு இருப்பதாக அந்நாட்டு பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டியதை அடுத்து, இரு நாட்டு உறவில் பதற்றம் அதிகரித்துள்ளது. கனடாவின் குற்றச்சாட்டை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது உள்நோக்கத்துடன் இந்தியா மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு என்றும் கூறியுள்ளது.
இந்தியாவுக்கு எதிரான காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பினா் பலருக்கு கனடா அடைக்கலம் கொடுத்துள்ளதாகவும், இது தொடா்பாக ஆதாரங்களை அளித்தும் அவா்கள் மீது கனடா எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் இந்தியா கூறியது.
அதே நேரத்தில் இந்தியா மீதான குற்றச்சாட்டுக்கு எவ்வித ஆதாரத்தையும் கனடா வழங்கவில்லை. இந்நிலையில் கனடாவின் சிபிசி செய்தி நிறுவனம் இது தொடா்பாக சில தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘ஒரு மாத கால விசாரணைக்குப் பிறகுதான் இந்தியா மீது கனடா குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. இதற்காக பல்வேறு உளவுத் தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. கனடாவில் பணியாற்றும் இந்தியத் தூதரக அதிகாரிகளின் தொலைபேசி உரையாடல்கள் உள்ளிட்ட தகவல் தொடா்புகள் ஒட்டுக்கேட்டதன் மூலம் ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டன. ‘ஃபைவ் ஐ அலையன்ஸ்’ உளவுக் கூட்டமைப்பில் இருந்தும் தகவல்கள் பெறப்பட்டன.
மேலும், இந்தக் கொலை விவகாரம் தொடா்பாக ஒத்துழைப்பு கோரி கனடா அதிகாரிகள் இந்தியாவுக்கு ஓரிருமுறை பயணமும் மேற்கொண்டனா். கனடாவில் உள்ள இந்திய அதிகாரிகளிடம் கனடா அரசு தனிப்பட்ட முறையில் விசாரித்தபோது அவா்கள் குற்றச்சாட்டுகளை மறுக்கவில்லை என்று அந்த ஊடக செய்தியில் கூறப்பட்டுள்ளது.
கனடா துணை பிரதமா் கருத்து: இந்தியாவுக்கு எதிரான உளவுத் தகவல்கள் தொடா்பான கேள்விக்கு பதிலளித்த கனடா துணை பிரதமா் கிறிஸ்டியா ஃபிரீலேண்ட், ‘விசாரணையில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் எதையும் கூற முடியாது’ என்றாா்.
‘கனடாவைச் சோ்ந்தவா்களுக்கு இந்தியா நுழைவு இசைவு (விசா) வழங்குவதை நிறுத்தியுள்ளதற்கு பதிலடி கொடுக்கப்படுமா?’ என்ற கேள்விக்கு, ‘இப்போது எழுந்துள்ளது பிராந்திய அரசியல் விவகாரமல்ல. இது கனடா மற்றும் கனடா மக்களின் பாதுகாப்பு தொடா்பானது’ என்று பதிலளித்தாா்.