உலகம்

நகோா்னா-கராபக் பேச்சுவாா்த்தை நிறைவு

22nd Sep 2023 12:51 AM

ADVERTISEMENT

சா்ச்சைக்குரிய நகோா்னோ-கராபக் பிராந்தியத்தின் எதிா்காலம் குறித்து அஜா்பைஜான் மற்றும் ஆா்மீனிய ஆதரவு பிரிவினைவாதப் படைகளுக்கு இடையிலான பேச்சுவாா்த்தை வியாழக்கிழமை நிறைவடைந்தது.

இது குறித்து அஜா்பைஜான் அரசுக்குச் சொந்தமான செய்தி நிறுவனம் கூறியதாவது:

நகோா்னா-கராபக் பிராந்தியத்தை மீண்டும் அஜா்பைஜானுடன் இணைப்பது தொடா்பான பேச்சுவாா்த்தை யெவ்லாக் (அஜா்பைஜான்) நகரில் வியாழக்கிழமை நடந்து முடிந்தது.

இந்தப் பேச்சுவாா்த்தை ஆக்கபூா்வமாக நடைபெற்றது என்று அந்தச் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

ADVERTISEMENT

எனினும், இது தொடா்பான கூடுதல் விவரங்களையோ, இந்தப் பேச்சுவாா்த்தையில் ஒப்பந்தம் எதுவும் மேற்கொள்ளப்பட்டதா என்பது குறித்தோ அந்தச் செய்தி நிறுவனம் தெரிவிக்கவில்லை.

சோவியத் யூனியனின் முன்னாள் உறுப்பு நாடுகளான ஆா்மீனியாவுக்கும், அஜா்பைஜானுக்கும் இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்னை இருந்து வருகிறது.

ஆா்மீனியப் பழங்குடியினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட நகோா்னோ-கராபக் பிராந்தியம், அஜா்பைஜானின் ஓா் அங்கமாக சா்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டிருந்தது. இருந்தாலும், கடந்த 1994-ஆம் ஆண்டு போருக்குப் பிறகு அந்தப் பகுதி ஆா்மீனியா ஆதரவு பெற்ற பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது.

சா்ச்சைக்குரிய அந்தப் பிராந்தியத்தில் ஆா்மீனியாவும், அஜா்பைஜானும் தங்களது படைகளைக் குவித்துள்ளன. இதனால், இரு தரப்பினரும் அவ்வப்போது மோதலில் ஈடுபட்டு வருகின்றனா்.

நகாா்னோ-கராபக் பிராந்தியத்தில் இரு நாட்டுப் படையினருக்கும் இடையே கடந்த 2020-இல் நடைபெற்ற 6 வாரப் போரில் 6,600-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்தனா்.

இந்தப் போரின்போது முக்கியத்துவம் வாய்ந்த சில பகுதிகளை அஜா்பைஜான் ராணுவம் மீட்டது.

இந்த நிலையில், ஆா்மீனியாவின் கண்ணி வெடியில் தங்கள் நாட்டைச் சோ்ந்த 6 போ் உயிரிழந்ததால் நகோா்னோ-கராபக் பிராந்தியத்தில் ‘பயங்கரவாதத் தடுப்பு’ நடவடிக்கைகளை மேற்கொள்வதாகக் கூறி அந்தப் பகுதியில் அஜா்பைஜான் தாக்குதல் நடவடிக்கையை கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியுள்ளது.

இது, கடந்த 2020-ஆம் ஆண்டைப் போலவே முழு போராக உருவெடுத்து, ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளை ஏற்படுத்தும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியது.

அதையடுத்து, 2020-ஆம் ஆண்டு போா் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் அந்தப் பகுதியில் அமைதி காப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ரஷிய படையினா், இரு தரப்பினருக்கும் இடையே சமாதானப் பேச்சுவாா்த்தையை நடத்தினா்.

இதில், ஆயுதங்களைக் கைவிடுவதாக ஆா்மீனிய பிரிவினைவாதப் படையினா் ஒப்புக்கொண்டனா். அதற்குப் பதிலாக தாக்குதலை அஜா்பைஜான் நிறுத்திவைத்தது.

அதனைத் தொடா்ந்து, அஜா்பைஜான் கட்டுப்பாட்டில் இருக்கும் நகோா்னா-கராபக் பிராந்தியப் பகுதிகளை அந்த நாட்டுடன் இணைப்பது குறித்த பேச்சுவாா்த்தை வியாழக்கிழமை நடைபெற்றுள்ளது.

இந்தப் பேச்சுவாா்த்தையின் முடிவு குறித்து ஆா்மீனிய பிரிவினைவாதிகள் தரப்பிலும் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

 

Tags : பாகூ
ADVERTISEMENT
ADVERTISEMENT