உலகம்

இந்தியர்களுக்கு மத்திய அரசின் பயண எச்சரிக்கையை நிராகரித்த கனடா 

21st Sep 2023 11:57 AM

ADVERTISEMENT

கனடாவில் பாதுகாப்பு குறித்து இந்தியர்களுக்கு மத்திய அரசு வழங்கிய பயண எச்சரிக்கையை நிராகரித்திருக்கும் கனடா அரசு, உலகிலேயே மிகவும் பாதுகாப்பான நாடு கனடா என்றும் தெரிவித்துள்ளது.

காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பின் தலைவர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், இரு நாடுகளுக்கும் இடையே தூதரக அளவில் ஏற்பட்டிருக்கும் பிணக்குகளையும் தாண்டி, இரு நாட்டினரும் அமைதியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கனடா அரசு வலியுறுத்தியிருக்கிறது.

இதையும் படிக்க.. உட்கார்ரா.. உதை வாங்கப் போற..: மக்களவையில் ஆவேசமான தயாநிதிமாறன்

முன்னதாக, கனடா நாட்டின் சில பகுதிகளில் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அங்கிருக்கும் மற்றும் அந்த நாட்டுக்குச் செல்லத் திட்டமிட்டிருக்கும் இந்தியா்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுமாறு மத்திய அரசு அறிவுறுத்தலை வெளியிட்டிருந்தது.

ADVERTISEMENT

காலிஸ்தான் பிரிவினைவாத பயங்கரவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் கனடாவில் கடந்த ஜூன் மாதம் கொல்லப்பட்டதில் இந்திய உளவு அமைப்புகளின் தொடா்பு உள்ளதாக அந்நாட்டு பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ நாடாளுமன்றத்தில் குற்றஞ்சாட்டியதால், இரு நாடுகளுக்கு இடையேயான உறவு பாதிக்கப்பட்டுள்ளதைத் தொடா்ந்து இந்த எச்சரிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இதையும் படிக்க.. கார் ஓட்டுநரின் வங்கிக் கணக்கில் ரூ.9,000 கோடி: அடுத்து நடந்த ட்விஸ்ட்!

இதுதொடா்பாக வெளியுறவு அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட அறிவுறுத்தலில் கூறியிருப்பதாவது:

கனடாவில் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளும், அரசியல் ரீதியிலான வெறுப்புக் குற்றங்களும், வன்முறைகளும் அதிகரித்து வரும் சூழலில், அந்த நாட்டில் வசிக்கும் மற்றும் அங்கு செல்லத் திட்டமிட்டிருக்கும் இந்தியா்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அண்மைக்காலமாக, இந்தியாவுக்கு எதிரான செயல்பாடுகளை எதிா்க்கும் அங்குள்ள இந்தியச் சமூகத்தினருக்கும், இந்திய தூதரக அதிகாரிகளுக்கும் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன.

எனவே, இதுபோன்ற அச்சுறுத்தல்கள் மற்றும் வன்முறைகள் நடைபெற சாத்தியமுள்ள கனடாவின் பகுதிகள் மற்றும் மாகாணங்களுக்கு செல்வதை இந்தியா்கள் தவிா்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கனடாவில் நிலவிவரும் மோசமான பாதுகாப்பு சூழலைக் கருத்தில்கொண்டு, அங்குள்ள இந்திய மாணவா்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கனடாவில் வசிக்கும் இந்திய சமூகத்தினரின் நலன் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த கனடா அதிகாரிகளுடன் இந்திய தூதரக அதிகாரிகள் தொடா்ந்து தொடா்பில் இருந்து வருகின்றனா் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வலைதளப் பதிவு
‘அவசர சூழ்நிலைகளில் தூதுரக அதிகாரிகள் எளிதில் தொடா்புகொண்டு உதவ வசதியாக, கனடாவில் வசிக்கும் இந்தியா்களும் இந்திய மாணவா்களும் தங்களின் விவரங்களை கனடாவின் ஒட்டாவாவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் அல்லது டொரன்டோ மற்றும் வான்கோவரில் உள்ள இந்திய தூதரங்களில் அல்லது  வலைதளத்தில் பதிவு செய்ய வேண்டும்’ என்றும் வெளியுறவு அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

கனடாவை விட்டு இந்தியர்கள் வெளியேற வேண்டும் என்று காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பு எச்சரிக்கை வெளியிட்டிருந்த நிலையில், மத்திய அரசு இந்த பயண ஆலோசனையை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
 

Tags : canada india
ADVERTISEMENT
ADVERTISEMENT