கனடாவில் மேலும் ஒரு காலிஸ்தான் தீவிரவாதி சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் இருந்து தப்பித்து கனடாவில் குடிபெயர்ந்த இந்தியாவால் தேடப்படும் காலிஸ்தான் பிரிவினைவாத பயங்கரவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் (45) கடந்த ஜூன் மாதம் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த சம்பவத்துக்குதற்கு இந்திய அரசு ஏஜெண்டுகளின் தலையீடு உள்ளதாக அந்நாட்டு பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ நாடாளுமன்றத்தில் குற்றஞ்சாட்டியதை தொடர்ந்து, இந்தியாவுக்கான தூதரக அதிகாரியை நாட்டைவிட்டு வெளியேற கனடா உத்தரவிட்டது.
இதற்கு பதிலடி தரும் விதமாக தில்லியில் உள்ள கனடா நாட்டு தூதரக அதிகாரியை 5 நாள்களுக்குள் வெளியேற இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஆணையிட்டது.
இதற்கிடையே, கனடாவில் வசிக்கும் இந்தியர்கள் குறிப்பாக இந்துக்கள் கனடாவை விட்டு வெளியேற வேண்டும் என்று சீக்கியர்களுக்கான நீதி அமைப்பு எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
இந்த சம்பவங்கள் இரு நாட்டு அரசுக்கு இடையிலான உறவில் விரிசலை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில், கடந்த 2017-ஆம் ஆண்டு போலி கடவுச்சீட்டு மூலம் பஞ்சாப்பிலிருந்து தப்பிச் சென்ற காலிஸ்தான் தீவிரவாதி சுக்தூல் சிங் கனடாவில் இன்று சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இதையும் படிக்க | இந்தியா மீதான குற்றச்சாட்டு: கனடாவுக்கு ஆதரவுக் கரம் நீட்டாத மேற்கத்திய நாடுகள்
இரு கும்பலுக்கு இடையே நடைபெற்ற மோதலில் இவர் கொல்லப்பட்டதாக முதல்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கெனவே கனடாவில் உள்ள இந்தியர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.