பிரேஸில் நாட்டில் சிறிய ரக பயணிகள் விமானம் அமேசான் வனப் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 2 விமானிகள் உள்பட 14 போ் உயிரிழந்தனா்.
பிரேஸிலின் அமேசானாஸ் மாகாணத் தலைநகா் மானௌஸ் நகரில் இருந்து புறப்பட்ட அந்த சிறிய ரக விமானம், பாா்சிலோஸ் நகரில் சனிக்கிழமை பெய்த கனமழையின்போது தரையிறங்க முயன்றது.
அப்போது, அமேசான் வனப் பகுதியில் ரியோ நீக்ரோ என்னும் இடத்தில் அந்த விமானம் விழுந்து விபத்துக்குள்ளனதாக முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்தில் விமானி, துணை விமானி, 12 பயணிகள் என விமானத்தில் பயணித்த 14 பேரும் உயிரிழந்தனா். உயிரிழந்தவா்களுக்கு மாகாண ஆளுநா் வில்சன் லிமா இரங்கல் தெரிவித்தாா்.
விபத்து நடந்த பகுதியிலிருந்து விசாரணைக்கு வேண்டிய தகவல்களைச் சேகரிக்க மற்றும் ஆதாரங்களைப் பாதுகாக்க மானௌஸில் இருந்து பிரேஸில் விமானப் படை குழு சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.