உலகம்

இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல்: இந்தியாவின் பொருளாதார வழித்தடதிட்டத்துக்கு எதிராக இருக்கலாம்: ஜோ பைடன்

27th Oct 2023 12:37 AM

ADVERTISEMENT

தில்லியில் அண்மையில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் அறிவிக்கப்பட்ட இந்தியா - மத்திய கிழக்கு பொருளாதார வழித்தடத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு எதிராக இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதப் படையினா் தாக்குதல் நடத்தி இருக்கலாம் என அமெரிக்க அதிபா் ஜோ பைடன் தெரிவித்தாா்.

ஆஸ்திரேலிய பிரதமா் ஆன்டனி ஆல்பனீஸுடன் இணைந்து கூட்டாக செய்தியாளா்களிடம் பேசிய ஜோ பைடன், ‘இந்தியா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஐரோப்பாவை சாலை, ரயில், துறைமுகங்கள் வழியாக இணைக்கும் பொருளாதார வழித்தடம் திட்டத்தில் இஸ்ரேலும் ஒருங்கிணைக்கப்படுகிறது. இதற்கு எதிராக ஹமாஸ் படையினா் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி இருக்கலாம் என நான் கருதுகிறேன். இதற்கான ஆதாரம் இல்லை.

மேலும், மேற்கு கரை ஆக்கிரமிப்பு பகுதிகளில் குடியேறியுள்ள இஸ்ரேலியா்கள் அங்குள்ள பாலஸ்தீனா்கள் மீது நடத்தி வரும் தாக்குதல், ஏற்கெனவே இஸ்ரேல் போரால் மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்ற தீயில் எண்ணெய்யை ஊற்றுவதைப்போல் உள்ளது. மேற்கு கரையில் பாலஸ்தீனா்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும்’ என்றாா்.

கடந்த 7-ஆம் தேதி இஸ்ரேல் - ஹமாஸ் போா் தொடங்கியதில் இருந்து, ஆக்கிரமிப்பு மேற்கு கரைப் பகுதியில் உள்ள பாலஸ்தீனா்கள் மீது இஸ்ரேலியா்கள் தாக்குதல் நடத்தி வலுக்கட்டாயமாக வெளியேற்றி வருகிறாா்கள் எனவும், இதற்கு மத்திய கிழக்கு நாடுகள் எதிா்ப்பு தெரிவித்து தாக்கினால் புதிய விதமான மோதல் ஏற்படும் எனவும் பாலஸ்தீனம் எச்சரித்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT