உலகம்

காஸாவில் தரை வழித் தாக்குதல்: பயிற்சி எடுக்கும் இஸ்ரேல் படைகள்

27th Oct 2023 11:39 AM

ADVERTISEMENT


ரஃபாஹ்: காஸாவில் இஸ்ரேல் வான் படைகள் குண்டுமழையைப் பெய்துவரும் நிலையில், தரைவழித் தாக்குதலை தீவிரப்படுத்தி ஹமாஸ் அமைப்பை நிர்மூலமாக்க தயாராகி வருகிறது இஸ்ரேல்.

காஸாவில் தரைவழித் தாக்குதலைத் தீவிரப்படுத்த இஸ்ரேல் படைகள் தயாராகி வருவதாக அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

இதற்கு ஏற்றாற்போல, வியாழக்கிழமை இரவு, வடக்கு காஸா பகுதிகளில், இஸ்ரேல் படைகள் பல மணி நேர தரைவழித் தாக்குதலில் ஈடுபட்டன. தீவிரவாத முகாம்களைக் குறிவைத்துத் தகர்க்குமாறு படைகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்ததாக ராணுவமும் தெரிவித்திருந்தது.

இதையும் படிக்க.. இது என் கடமை.. காஸாவில் குடும்பத்தினரை இழந்த மறுநாள் பணிக்கு வந்த செய்தியாளர்

ADVERTISEMENT

காஸாவின் வடக்குப் பகுதியில் இருக்கும் தீவிரவாத முகாம்களை அழிக்கவும், அவர்கள் வசம் இருக்கும் பிணைக் கைதிகளை மீட்கவும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

நேகெவ் பாலைவனத்தில் லிட்டில் காஸா என்று பெயரிடப்பட்டிருக்கும் ஒரு கிராமப் பகுதிக்குள்  தரைவழித் தாக்குதலில் ஈடுபட்ட இஸ்ரேல் வீரர்களுக்கு நேரான சாலைகள், ஆங்காங்கே சிக்கலான சுரங்கப் பாதைகளை கண்டறிந்து தாக்குதலை எதிர்கொள்ள ஆயத்தமாகும் வகையில் ஒரு பயிற்சியாக அமைந்திருந்ததாகவும் கூறப்படுகின்றன.

இதையும் படிக்க.. எப்படி இருந்த நான்.. காஸாவின் செயற்கைக்கோள் புகைப்படங்கள்

ஆனால், இது, தரைவழித் தாக்குதலுக்கான ஒத்திகை என்றும், தரைவழித் தாக்குதலை தீவிரப்படுத்துவதற்கான பயிற்சியாக, இஸ்ரேல் படைகள் இதனை செய்து பார்த்திருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் அக்டோபர் 7ஆம் தேதி திடீர் தாக்குதல் நடத்திய நிலையில், காஸா பகுதியை முற்றுகையிட்டு இஸ்ரேல் படையினர் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

காஸா மீது இஸ்ரேல் படையினா் நடத்திய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 6,500-ஐக் கடந்துள்ளதாக அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இரண்டு வாரங்களுக்கும் மேலாக போர் நீடித்து வரும் நிலையில், காஸா பகுதியில் தரைப்பகுதியை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்த இஸ்ரேல் படைகள் தயாராக இருக்கிறது.

இஸ்ரேல் - பாலஸ்தீனத்துக்கு இடையேயான மோதலில், காஸா பகுதி மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் ஏராளமான உயிர்கள் பலியாகியுள்ளன. அதேவேளையில், ஹமாஸ் அமைப்பை முழுமையாக ஒழித்துக்கட்டும் வகையில், காஸா பகுதிக்குள் தீவிர தரைவழித் தாக்குதலை நடத்தினால், மிகப்பெரிய அளவில் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் அஞ்சப்படுகிறது. 

இதையும் படிக்க.. கிரெடிட் கார்டில் செலவிடுவது குறைந்திருக்கிறதா?

ஹமாஸ் படையினரைக் குறிவைத்து நடத்தப்படும் இந்தப் போரில், அப்பாவி பொதுமக்களின் உயிர்களை கருத்தில் கொள்ளுமாறு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்திவந்தாலும், அதற்கு இஸ்ரேல் பெரிய அளவில் தலையசைக்கவில்லை என்றே தோன்றுகிறது.

தரைவழித் தாக்குதலுக்கு முன்பு, மிகப்பெரிய அளவில், மக்களை அப்புறப்படுத்தும் பணியை மேற்கொள்ளவும் அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மக்களின் பலி எண்ணிக்கையை குறைக்க போர் ஆலோசகர்கள் அடங்கிய குழுவையும் அமெரிக்கா இஸ்ரேலுக்கு அனுப்பவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT