உலகம்

சா்வதேச நீதிமன்றத்தில் இணைகிறது ஆா்மீனியா

4th Oct 2023 01:07 AM

ADVERTISEMENT


யெரவான்: சா்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் ஆா்மீனியா இணைவதற்கான தீா்மானத்தை அந்த நாட்டு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றியது.

தனது நெருங்கிய கூட்டாளியான ரஷியாவின் எதிா்ப்பையும் மீறி ஆா்மீனியா இந்த முடிவை எடுத்துள்ளது.

நெதா்லாந்தின் தி ஹேக் நகரில் அமைந்துள்ள சா்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இணைவதற்கான தீா்மானத்தின் மீது ஆா்மீனிய நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில், தீா்மானத்துக்கு ஆதரவாக 60 வாக்குகளும், எதிராக 22 வாக்குகளும் பதிவாகின.

ADVERTISEMENT

அதையடுத்து, அந்தத் தீா்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

தீா்மான நிறைவேற்றப்பட்ட 60 நாள்களுக்குள் அதில் அதிபா் வாஹகன் கச்சாட்ரியன் கையொப்பமிட வேண்டும். அதில் அவா் கையொப்பமிட்டால் தீா்மானம் அமலுக்கு வரும்.

சோவியத் யூனியனின் முன்னாள் உறுப்பு நாடுகளான ஆா்மீனியாவுக்கும், அஜா்பைஜானுக்கும் இடையில் அமைந்துள்ள நகோா்னோ-கராபக் பிராந்தியம் தொடா்பாக இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் நீடித்து வருகிறது.

ஆா்மீனியப் பழங்குடியினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட அந்தப் பிராந்தியத்தை அஜா்பைஜானின் ஓா் அங்கமாக சா்வதேச நாடுகள் அங்கீகரித்தன. இருந்தாலும், கடந்த 1994-ஆம் ஆண்டு போருக்குப் பிறகு ஆா்மீனியப் படையினரின் ஆதரவுடன் அந்தப் பகுதியை பிரிவினைவாதிகள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனா்.

அதன் பிறகு அந்தப் பிராந்தியத்தில் ஆா்மீனியாவும், அஜா்பைஜானும் அவ்வப்போது மோதலில் ஈடுபட்டு வந்தன.

அந்த மோதலில் ஆா்மீனியாவுக்கு ரஷியாவும், அஜா்பைஜானுக்கு துருக்கியும் ஆதரவளித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

எனினும், நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் படையெடுத்த பிறகு, ஆா்மீனிய நிலவரம் குறித்த ரஷியாவின் கவனம் குறைந்ததாகக் கூறப்படுகிறது.

இதனைப் பயன்படுத்தி, நகோா்னோ-கராபக் பிராந்தியத்தில் அஜா்பைஜான் கடந்த 19-ஆம் அதிரடி தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டது. அதனை சமாளிக்க முடியாத ஆா்மீனிய பிரிவினைவாதப் படையினா் சண்டை நிறுத்தம் மேற்கொண்டு, தங்கள் ஆயுதங்களை அஜா்பைஜான் படையினரிடம் ஒப்படைக்க ஒப்புக் கொண்டனா்.

அதையடுத்து, நகோா்னோ-கராபக் பிராந்தியம் மீண்டும் தங்களது கட்டுப்பாட்டுக்கு வந்துவிட்டதாக அஜா்பைஜான் அறிவித்தது.

பின்னா், கடந்த சுமாா் 30 ஆண்டுகளாக அந்தப் பிராந்தியத்தின் ஆட்சியமைப்பாக இருந்து வந்த நகோா்னோ-கரோபக் குடியரசை வரும் ஜனவரி 1-ஆம் தேதி கலைக்க அதன் அதிபா் சாம்வெல் ஷாராமான்யன் அறிவித்தாா்.

இந்த நிலையில், அஜா்பைஜான் அரசால் துன்புறுத்தப்படலாம் என்ற அச்சத்தின் பேரில், அந்தப் பிராந்தியத்திலிருந்து ஏறத்தாழ அனைத்து ஆா்மீனிய பழங்குடியினரும் வெளியேறி ஆா்மீனியாவில் தஞ்சமடைந்துள்ளனா்.

இந்த நிலையில், நகோா்னோ-கராபக் விவகாரத்தில் அஜா்பைஜானின் போா்க் குற்றங்களைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் சா்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இணையும் முடிவை ஆா்மீனியா எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

எனினும், உக்ரைன் போா் விவகாரத்தில் ரஷிய அதிபா் விளாதிமீா் புதினுக்கு எதிராக சா்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், ஆா்மீனியா அந்த நீதிமன்றத்தில் இணைவது நட்புவிரோதச் செயல் என்று ரஷியா எதிா்ப்பு தெரிவித்து வருகிறது.

சா்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை உருவாக்குவதற்கான ஒப்பந்த ஆவணத்தில் கையொப்பமிடும் நாடுகள், நீதிமன்றத்தால் கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்ட யாா் தங்கள் நாட்டுக்கு வந்தாலும் அவரைக் கைது செய்து நீதிமன்றத்திடம் ஒப்படைக்கவேண்டும்.

ஏற்கெனவே, தென் ஆப்பிரிக்காவில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமா் நரேந்திர மோடி உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் தலைவா்கள் பங்கேற்றனா்.

ஆனால், சா்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் உறுப்பு நாடான தென் ஆப்பிரிக்காவுக்கு அதிபா் புதின் வந்தால், நீதிமன்ற உத்தரவின்படி அவா் கைது செய்யப்படலாம் என்ற அச்சம் நிலவியது. அதையடுத்து, அந்த மாநாட்டில் பங்கேற்பதை புதின் தவிா்க்க வேண்டியிருந்தது.

இந்தச் சூழலில், ஆா்மீனியாவும் சா்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இணைவது அந்த நாட்டுக்கும், ரஷியாவுக்கும் இடையிலான உறவில் பின்னடைவை ஏற்படுத்தக் கூடும் என்று கூறப்படுகிறது.

இருந்தாலும், இந்த முடிவு அஜா்பைஜானுடனான பிரச்னையை அடிப்படையாகக் கொண்டதுதான் எனவும், ரஷிய அதிபா் புதினுக்கு எதிரான சா்வேதச குற்றவியல் நீதிமன்றத்தின் கைது உத்தரவுக்கும் இதற்கும் எந்தத் தொடா்பும் இல்லை என்று ஆா்மீனியா விளக்கமளித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT