ஒரே நாளில் ரஷியாவின் 29 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
இந்த ட்ரோன்கள் ஈரானின் தாக்குதல் பிரிவைச் சேர்ந்தவை எனவும் உக்ரைன் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. உக்ரைனின் ஆற்றல் தொடர்பான உள்கட்டமைப்புகளின் மீது ரஷியா தனது தாக்குதலை மீண்டும் தொடங்கியுள்ளது. ஆற்றல் உள்கட்டமைப்புகளின் மீதான தாக்குதல்களால் உக்ரைன் கடந்த ஆண்டு பெருமளவில் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், ரஷியா மீண்டும் தாக்குதலைத் தொடங்கியுள்ளது.
இதையும் படிக்க: துருக்கியில் கிடைத்த களிமண் துண்டுகளில் சடங்குகளைப் பற்றிய குறிப்புகள்!
இது தொடர்பாக உக்ரைன் விமானப் படை தரப்பில் கூறியதாவது: ரஷிய ஆக்கிரமிப்பாளர்கள் உக்ரைன் மீது 31 ஆளில்லா விமானங்களைக் கொண்டும், இஷ்கந்தர்-கே ஏவுகணையைக் கொண்டும் தாக்கினர். இந்தத் தாக்குதலில் நாங்கள் 29 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தி விட்டோம் எனக் கூறப்பட்டுள்ளது.
ரஷியா மீதான தடைகளை அதிகப்படுத்துமாறு உக்ரைன் அதிபர் ஐரோப்பிய ஒன்றியத்திடம் அண்மையில் வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.