உலகம்

துருக்கியில் கிடைத்த களிமண் துண்டுகளில் சடங்குகளைப் பற்றிய குறிப்புகள்!

3rd Oct 2023 06:28 PM | இரா. தமிழ்வேந்தன்

ADVERTISEMENT

மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகப் பேசப்பட்டு, தற்போது பயன்பாட்டில்  இல்லாமல்போய்விட்ட எழுத்துருக்களைக் கொண்ட பழங்கால களிமண் துண்டுகள் துருக்கியில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டின் முற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் வடக்கு மற்றும் மத்திய துருக்கியில் உள்ள போகஸ்காய் - ஹட்டுசா பகுதியில் இந்த களிமண் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.  கி.மு. 1600-ல் இருந்து கி.மு. 1200  வரை ஹிட்டைட் பேரரசின் தலைநகரமாக விளங்கியுள்ளது ஹட்டுசா. தற்போது ஹட்டுசா யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய இடங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. 

ஜெர்மன் தொல்லியல் நிறுவனத்தைத் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் ஆண்டிரியாஸ் ஷாச்னர் தலைமையிலான தொல்லியல் குழு ஆண்டுதோறும் இந்தப் பகுதியில் அகழாய்வு மேற்கொண்டு வருகிறது.

இந்த அகழாய்வின்போது ஆயிரக்கணக்கான களிமண் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த களிமண் துண்டுகளின் மீது பழமையான கியூனேபார்ம் எழுத்துருக்களில் எழுதப்பட்டுள்ளது. இந்த பழமையான கியூனேபார்ம் எழுத்துருவானது 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக மெசபடோமியாவில் வசித்த சுமேரியர்களால் உருவாக்கப்பட்டதாகும்.  

ADVERTISEMENT

அகழ்வாராய்ச்சில் கண்டெடுக்கப்பட்ட இந்த களிமண் துண்டுகள் குறித்து ஆண்டிரியாஸ் ஷாச்னர், இந்த களிமண் துண்டுகள் அனைத்தும் குறிப்பிட்ட சில கட்டடங்களில் இருந்து குவியலாகக் கண்டெடுக்கப்பட்டன. இந்தக் கட்டடங்களைக் காப்பகங்கள் அல்லது நூலகங்கள் எனவும் கூறலாம். இந்தப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ள களிமண் துண்டுகளில் எழுதப்பட்டுள்ளவை தெளிவாக இல்லை. 

போகஸ்காய் - ஹட்டுசா பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ள அதிகமான களிமண் துண்டுகள் ஹிட்டைட்ஸ் மொழியில் எழுதப்பட்டுள்ளன. சில களிமண் துண்டுகளில் மற்ற மொழிகளும் இடம்பெற்றுள்ளன. மற்ற மொழிகள் இடம் பெற்றிருப்பதிலிருந்து ஹிட்டைட்ஸைச் சேர்ந்தவர்கள் மற்ற நாடுகளில் இருக்கும் மத சடங்குகள் குறித்து  அறிந்துகொள்ள ஆர்வமாக இருந்தனர் என்பதைக் காட்டுகிறது. முன்னதாக எந்த மொழி என தெரியாமலிருந்த எழுத்து வடிவங்கள் அந்த மத சடங்குகள் தொடர்பானவையாகத் தெரிகிறது. இந்தக் களிமண் துண்டுகளில் எழுதப்பட்டுள்ள மத சடங்குகள் குறித்த உருக்களுக்கு ஹிட்டைட்டி மொழியில் அர்த்தம் என்னவென்று விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. களிமண் துண்டுகளில் எழுதப்பட்டுள்ள அறிமுக வார்த்தைகள் ஹிட்டைட்டில் எழுதப்பட்டுள்ளது. இது கண்டிப்பாக மதம் சார்ந்த எழுத்துகளாக இருக்கும் என்றார்.

அழிந்த மொழி

இந்த களிமண் துண்டுகள் பகுப்பாய்வுக்கு உட்படுத்துவதற்காக ஜெர்மனியில் உள்ள பகுப்பாய்வு கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த களிமண் துண்டுகளைக் குறித்தும், அவற்றில் எழுத்தப்பட்டுள்ளவை குறித்தும் உர்ஸ்பெர்க் பல்கலைக்கழகப் பேராசிரியர் டேனியல் ஆய்வு மேற்கொண்டார். அந்த களிமண் துண்டுகளில் எழுதப்பட்டிருந்த ஹிட்டைட் அறிமுக எழுத்துருக்களை வைத்து அதனை கலாஸ்மா மொழி எனக் கண்டறிந்தார். கலாஸ்மா என்பது ஹிட்டைட் நிலப்பகுதியின் வடமேற்கின் விளிம்பில் உள்ள பகுதியாகும். இந்த இடம் தற்போது உள்ள துருக்கியின் போலு நகரத்துக்கு அருகில் உள்ளது.

கல்வியாளார்களால் இன்னும் இந்த களிமண் துண்டுகளில் எழுதப்பட்டிருப்பது என்ன என்பதை முழுவதுமாகக் கண்டறிய முடியவில்லை. இந்த களிமண் துண்டுகளில் கூறப்பட்டிருப்பது முழுவதுமாக என்னவென்று தெரியாமல் அந்த களிமண் துண்டுகள்  தொடர்பான புகைப்படங்களை வெளியிட அவர்கள் விரும்பவில்லை. 

இந்த களிமண் துண்டுகளில் எழுதப்பட்டிருப்பது இந்திய - ஐரோப்பிய மொழிகளின் குடும்பத்தைச் சார்ந்த அனடோலியன் மொழிக் குழுவைச் சேர்ந்தது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். ஹிட்டைட் மொழியும் இதே குடும்பத்தைச் சேர்ந்ததாகும். இந்தப் பகுதியில் அக்காடியன், ஹீப்ரு, அரமெயிக் போன்ற பழமையான மொழிகளும் பேசப்பட்டது. 

ஆராய்ச்சியாளர் டேனியல் இதுதொடர்பாக பேசுகையில், ஹிட்டைட்ஸைச் சேர்ந்தவர்கள் மற்ற அந்நிய மொழிகளில் உள்ள சடங்குகளை பதிவு செய்து வைப்பதில் தனித்துவமான ஆர்வம் காட்டினர். போகஸ்கோய் ஹட்டுசா பகுதியில் கண்டெடுக்கப்பட்ட களிமண் துண்டுகளில் இன்னும் சில அந்நிய மொழிகளின் சடங்குகள் குறித்து குறிப்புகள் உள்ளன. இந்திய - ஐரோப்பிய மொழிகளான லுவியன் மற்றும் பாலாய்க்கின் சடங்குகள் குறித்தும், இந்திய - ஐரோப்பிய மொழி அல்லாத ஹட்டிக் மொழியில் உள்ள சடங்குகள் குறித்தும் குறிப்புகள் உள்ளன.

இந்த களிமண் துண்டுகளில் உள்ள சில சடங்குகள் சார்ந்த குறிப்புகள் ஹிட்டைட்டைச் சேர்ந்த எழுத்தாளர்களால் எழுதப்பட்டுள்ளது. அவை அனடோலியன், சிரியன் மற்றும் மெசபடோமியன் மொழிகளின் பாரம்பரியத்தைக் குறிப்பிடுகின்றன.

இந்த சடங்குகள் மூலம் வெண்கலக் காலத்தின் பிற்பகுதியில் ஹிட்டைட் மொழி பேசப்படாத, மிகவும் குறைந்த அளவில் அறியப்பட்ட அனடோலியா குறித்தும், அதன் சடங்குகளின் மதிப்புகள் குறித்தும் அறியப் பயன்படுகிறது என்றார். 

ஹிட்டைட் பேரரசு

நவீன கால துருக்கி (அனடோலியா) மற்றும் சிரியாவை இந்த ஹிட்டைட் பேரரசு  பல நூற்றாண்டுகளாக ஆட்சி செய்து வந்துள்ளது. இவற்றுள் பழங்காலத்தில் சிரியா மிகவும் சக்திவாய்ந்த பேரரசாக இருந்து வந்துள்ளது. கி.மு. 1274-ல் எகிப்தியர்களுக்கு எதிராக கானான் பகுதியின் மீது ஆதிக்கத்தை செலுத்துவதற்காக ஹிட்டைட்ஸ் "கதேஷ்” போரைத் தொடுத்தனர். இந்த கானான் பகுதி நவீன கால தெற்கு சிரியா, லெபனான் மற்றும் இஸ்ரேல் பகுதிகளை உள்ளடக்கியதாகும்.

இந்த கதேஷ் போர் வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட முதல் ராணுவ நடவடிக்கையாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இந்தப் போரில் கதேஷ் நகரத்தை ஹிட்டைட்ஸ் பிடித்த போதிலும் அவர்கள் தோல்வியைத் தழுவியதாகவே கூறப்படுகிறது. இந்தப் போரில் எகிப்தியர்கள் கானான் (தெற்கு சிரியா, லெபனான் மற்றும் இஸ்ரேல்) பகுதியின் மீதான ஆதிக்கத்தை இழக்கவில்லை.


கி.மு. 1600-ல் ஹட்டுசா ஹிட்டைட் அரசின் தலைநகராக மாறியது. 100 ஆண்டுகளுக்கும் மேலாக ஹட்டுசாவில் நடக்கும் தொல்லியல் அகழ்வாராய்ச்சி அங்கு ஒரு மிகப் பெரிய பழங்கால நகரம் இருந்ததை வெளிப்படுத்தியுள்ளது. 

ஆனால், வெண்கல காலத்தின் பிற்பகுதியில் அழிவுக்குள்ளாகி இந்த நகரத்தை விட்டு கி.மு. 1200-ல் மக்கள் வெளியேறியதாக கூறப்படுகிறது. இதனால், மத்தியத்தரைக் கடலின் கிழக்கில் இருந்த பல பழமையான நகரங்கள் அழிந்து போனதாகவும், பேரிழப்புகளுக்கு ஆளானதகாவும் கூறப்படுகிறது. இந்த அழிவு ’கடல் மக்கள்’ என அழைக்கப்படும் புலம் பெயர்ந்தவர்களின் படையெடுப்புகளால் ஏற்பட்டிருக்கலாம் எனவும், திடீரென ஏற்பட்ட பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இல்லையெனில், இரும்பின் கண்டுபிடிப்பு இந்த நகரங்களின் அழிவுக்கு வழிவகுத்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. வரலாற்று ஆசிரியர்கள் மற்றும் தொல்லியல் ஆய்வாளர்களுக்கு இடையே இந்த நகரங்களின் அழிவுக்கான காரணம் குறித்த விவாதம் இன்றளவும் தொடர்ந்து வருகிறது.

இந்த அழிந்துபோன மொழியில் இருந்து மேலும் ஏதேனும் எழுத்துகள் அடங்கிய களிமண் துண்டுகள் கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகளோ அல்லது மற்ற பழங்கால மொழிகள் அடங்கிய களிமண் துண்டுகளோ போகஸ்காய்-ஹட்டுசா பகுதியிலிருந்து கிடைப்பதற்கான வாய்ப்புகளோ இல்லை என ஆராய்ச்சியாளர் ஷாச்னர் கூறியது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT