உலகம்

துபை விமான நிலையத்தில் மாறப் போகிறீர்களா? எச்சரிக்கை! அமெரிக்க பெண்ணுக்கு நேர்ந்த அவலம்!!

3rd Oct 2023 10:20 PM

ADVERTISEMENT

 

துபை விமான நிலையத்தில் மாற்று விமானத்துக்காக காத்திருந்த அமெரிக்க பெண்ணுக்கு நேர்ந்த சோகம் பலரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

விமான நிலையத்தில் காவலாளியின் கைகளைத் தொட்டதற்காக அப்பெண்ணுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்காவின் நியூ யார்க் நகரைச் சேர்ந்தவர் எலிசபெத் பொலான்கோ டி லாஸ் சான்டோஸ். 21 வயதான எலிசபெத், தனது 44 வயதான தந்தை இழந்ததைத் தொடர்ந்து, மன அழுத்தத்திலிருந்து விடுபட பயணம் மேற்கொண்டுள்ளார். 

ADVERTISEMENT

இடுப்பில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட அவர், தனது தோழியுடன் இப்பயணத்தை மேற்கொண்டார். பயணத்தை முடித்துகொண்டு, துபை வழியாக நியூ யார்க் செல்ல அவர்கள் திட்டமிட்டிருந்தனர்.

மாற்று விமானத்துக்காக துபை விமான நிலையத்தில் 6 மணிநேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து வலி குறைவதற்காக இடுப்பில் பெல்ட் அணிந்திருந்த அவரிடம், விமான நிலைய காவலாளி ஒருவர் பெல்ட்டை அகற்ற வலியுறுத்தியுள்ளார். 

தனக்கு இடுப்பில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும், வலிக்காக அதனை அணிந்துள்ளதாகவும் எலிசபெத் விளக்கமளித்தும் ஊழியர்கள் தொடர்ந்து வற்புறுத்தியுள்ளனர். 

அதனைத் தொடர்ந்து விமான நிலையத்திலிருந்த ஒய்வறையில்  கடும் வலியுடன் பெல்ட்டை கழற்றியுள்ளார். மிகுந்த வலியால் தன்னுடைய தோழியிடம் கொண்டு சென்று விடுமாறு, பெண் காவலாளி ஒருவரின் கரத்தை எலிசபெத் பிடித்துள்ளார். 

ஆனால், இதனால் கோபமடைந்த பெண் காவலாளி, தன்னைத் தாக்கி, அவமானப்படுத்தியதாக எலிசபெத் மீது புகாரளித்தார். நீண்ட நேர வாக்குவாதத்துக்குப் பிறகு அது வழக்குப்பதிவாகவும் மாறியது.

அரபு மொழியில் எழுதப்பட்ட விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கையெழுத்திட்டப்  பிறகு அவருடைய பயணத்துக்குத் தடை விதிக்கப்பட்டது. 

அமெரிக்காவில் சில்லறை வணிக மேலாளராக பணிபுரிந்துவரும் எலிசபெத், அந்நாட்டு மதிப்பில் 10 ஆயிரம் (திராம்) அபராதம் விதிக்கப்பட்டது. 

அபராதம் விதிக்கப்பட்டதுடன் ஓராண்டு சிறை தண்டனையும் எலிசபெத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

துபையில் சட்டரீதியாக உதவும் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த ராதா ஸ்டிர்லிங் இது தொடர்பாக பேசியதாவது, 6 மணி நேரம் துபையில் இருக்க வேண்டும் என்பதே எலிசபெத் நோக்கம். ஆனால், இந்த வழக்கால் அவர் மாதக்கணக்கில் துபையில் தங்கவேண்டியதாயிற்று. அதோடு அதற்காக 50 ஆயிரம் டாலரும் வழக்குரைஞர் தொகையும் கொடுக்க வேண்டியதாயிற்று.

அவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், எல்லாம் சரியாக இருந்திருந்தால், அவர் 6 மணிநேரம் மட்டுமே துபையில் இருந்திருப்பார். 

இப்படிப்பட்ட பயணத்தையா மக்கள் விரும்புவார்கள் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT