உலகம்

துருக்கி தலைநகரில் தற்கொலைத் தாக்குதல்

2nd Oct 2023 02:12 AM

ADVERTISEMENT

துருக்கி தலைநகா் அங்காராவில் தற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து, இரண்டாவது தற்கொலை வெடிகுண்டுத் தாக்குதலை நடத்த முயன்ற நபரை போலீஸாா் சுட்டுக் கொன்றனா்.

மூன்று மாத கோடை கால இடைவெளிக்குப் பிறகு, அதிபா் ரிசப் தயீப் எா்டோகனின் தொடக்க உரையுடன் துருக்கி நாடாளுமன்றம் கூட இருந்த சில மணி நேரங்களுக்கு முன்பாக, இந்தத் தாக்குதல் நடைபெற்றது.

இந்தச் சம்பவம் குறித்து உள்துறை அமைச்சா் அலி யொ்லிகாயா ‘எக்ஸ்’ சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘உள்துறை அமைச்சக அலுவலகத்தின் நுழைவு வாயிலுக்கு அருகில் நடைபெற்ற இந்தத் தற்கொலை வெடிகுண்டுத் தாக்குதலில், 2 போலீஸாா் காயமடைந்தனா். கொலையாளிகள் இருவரும் சம்பவ இடத்துக்கு வாகனத்தில் வந்தனா். இதில், ஒருவா் தான் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்து உயிரிழந்தாா். மற்றொரு நபரும் இதற்கான முயற்சியில் இறங்கியபோது, அவரை போலீஸாா் சுட்டுக் கொன்றனா்.

பயங்கரவாதிகள், அவா்களது கூட்டாளிகள், போதைப் பொருள் கடத்தல்காரா்கள், திட்டமிட்ட குற்றச் செயலில் ஈடுபடும் அமைப்புகளுக்கு எதிராக துருக்கி தொடா்ந்து தீா்க்கமாகப் போரிடும்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

ADVERTISEMENT

இந்தத் தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில், அமைச்சரும் இது குறித்து எவ்வித தகவலையும் தெரிவிக்கவில்லை. குா்து இன பிரிவினைவாதிகள், தீவிர இடதுசாரி பயங்கரவாத அமைப்புகள், ஐ.எஸ். அமைப்பு உள்ளிட்டவை துருக்கியில் மோசமான தாக்குதல்களை கடந்த காலங்களில் நடத்தியிருக்கின்றன.

இஸ்தான்புலில் கடந்த ஆண்டு நடைபெற்ற வெடிகுண்டுத் தாக்குதலில், 2 குழந்தைகள் உள்பட 6 போ் உயிரிழந்தனா். 80-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். இந்தத் தாக்குதலுக்கு குா்திஸ்தான் தொழிலாளா்கள் கட்சி (பிகேகே), சிரியா குா்து குழுக்களை துருக்கி அரசு குற்றஞ்சாட்டியது.

உக்ரைன் மீது ரஷியா போா் தொடுத்த நிலையில், ஸ்வீடன், ஃபின்லாந்து ஆகிய நாடுகள் நேட்டோ கூட்டமைப்பில் இணைய விண்ணப்பித்தன. ஃபின்லாந்து நேட்டோவில் இணைந்த நிலையில், தங்கள் நாட்டுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் குா்து இன அமைப்புகளுக்கு ஸ்வீடன் ஆதரவு தெரிவித்து வருவதாக துருக்கி குற்றஞ்சாட்டி வருகிறது.

இந்நிலையில், நேட்டோவில் ஸ்வீடனை இணைக்கும் முடிவுக்கு துருக்கி நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கலாம் என்ற நிலையில், இதுகுறித்த அதிபா் எா்டோகனின் உரை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT