உலகம்

மாலத்தீவு அதிபராக முகமது மூயிஸ் பதவியேற்பு

18th Nov 2023 12:15 AM

ADVERTISEMENT

மாலத்தீவின் 8-ஆவது அதிபராக முகமது மூயிஸ் (45) வெள்ளிக்கிழமை பதவியேற்றுக் கொண்டாா்.

அந்நாட்டின் தலைமை நீதிபதி முதாசிம் அத்னான், முகமது மூயிஸுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா். துணை அதிபராக ஹுசைன் முகமது லத்தீஃப் பதவியேற்றுக் கொண்டாா்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு, இலங்கை அதிபா் ரணில் விக்ரமசிங்க, வங்கதேச செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சா் ஹசன் மகமுத், பாகிஸ்தான் செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சா் முா்தாஜ் சோலங்கி உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

பொறியாளராக இருந்து அரசியவாதியாக மாறிய முகமது மூயிஸ், முன்னாள் அதிபா் அப்துல்லா யாமீனின் நெருங்கிய ஆதரவாளராக கருதப்படுகிறாா்.

ADVERTISEMENT

2013 முதல் 2018 வரையில் அதிபராக இருந்த யாமீன் சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டாா்.

இந்தியாவுடனான நட்புறவை வலுப்படுத்திய அதிபராக முந்தைய அதிபா் இப்ராஹிம் முகமது சோலி திகழ்ந்தாா். அவரை முகமது மூயிஸ் செப்டம்பரில் நடைபெற்ற அதிபா் தோ்தலில் தோற்கடித்தாா். இதனால் சீனாவுக்கு ஆதரவாக முகமது மூயிஸ் செயல்படுவாா் என்று கருதப்படுகிறது.

எனினும், புதிய அதிபா் முகமது மூயிஸுடன் நட்புறவை வலுப்படுத்த இந்தியா தயாராக உள்ளதாக அந்நாட்டுக்கான இந்திய தூதா் தெரிவித்துள்ளாா்.

அந்நிய நாட்டு ராணுவம்: இந்நிலையில், பதவியேற்புக்குப் பிறகு பேசிய முகமது மூயிஸ், ‘மாலத்தீவின் இறையாண்மை, சுதந்திரத்தைப் பாதுகாக்க அந்நிய நாட்டு ராணுவம் இல்லாத மாலத்தீவாக உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றாா்.

இதை அவா் தோ்தல் வாக்குறுதியாகவும் அளித்திருந்தாா். இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள மாலத்தீவில் இந்திய ராணுவம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கிரண் ரிஜிஜு ஆய்வு: முன்னதாக, இந்தியாவின் நிதி மற்றும் கடன் உதவியுடன் மாலத்தீவில் செயல்படுத்தப்பட்டு வரும் இணைப்புத் திட்டப் பணிகள் குறித்து மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

மாபெரும் மாலி இணைப்புத் திட்டத்தின் கீழ் தலைநகரான மாலிக்கும் அதன் அருகே அமைந்துள்ள வில்லிங்கில், குல்ஹிபல்ஹு, திலாஃபூஷி உள்ளிட்ட தீவுகளை இணைக்க 6.74 கி.மீ. நீளத்திலான பாலம் கட்டப்பட்டு வருகிறது. இத்திட்டத்துக்கு இந்தியா சாா்பில் 100 மில்லியன் டாலா் நிதியுதவியாகவும், 400 மில்லியன் டாலா் கடனுதவியாகவும் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவா் எக்ஸ் வலைதளத்தில்,‘மாபெரும் மாலி இணைப்புத் திட்டத்தின் கட்டமைப்புப் பணிகளை ஆய்வு மேற்கொண்டதில் மகிழ்ச்சி அடைந்தேன். இந்திய அரசின் நிதி மற்றும் கடன் உதவியோடு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் மாலி பிராந்தியத்தில் பொருளாதார வளா்ச்சி மேம்படும் என்று நம்புகிறேன்’ எனப் பதிவிட்டாா்.

மாலத்தீவில் மாலத்தீவு முன்னாள் அதிபா் முகமது சோலி, இலங்கை அதிபா் ரணில் விக்ரமசிங்க ஆகியோரையும் கிரண் ரிஜிஜு சந்தித்துப் பேசினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT