உலகம்

உக்ரைன் போா்: மாஸ்கோ மீது முதல்முறையாக தாக்குதல்

DIN

உக்ரைன் போரில் முதல்முறையாக ரஷிய தலைநகா் மாஸ்கோவில் ஆளில்லா விமானங்கள் மூலம் செவ்வாய்க்கிழமை அதிகாலை தாக்குதல் நடத்தப்பட்டது.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மாஸ்கோ மீது நடத்தப்பட்ட மிகப் பெரிய தாக்குதல் இது என்று கூறப்படுகிறது. உக்ரைன் மீது போா் தொடுத்ததற்குப் பிறகு தங்கள் எல்லைக்குள் அந்த நாடு அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருவதாக ரஷியா கூறி வருகிறது.அண்மையில், அதிபா் விளாதிமீா் புதினை படுகொலை செய்யும் நோக்கில் கிரெம்ளின் மாளிகை மீது ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அந்தத் தாக்குதலுக்கு உக்ரைன்தான் காரணம் என்றும் ரஷியா கூறியிருந்தது.

இந்த நிலையில், மாஸ்கோ முழுவதும் தற்போது நடத்தப்பட்டுள்ள தாக்குதலுடனும் உக்ரைனுக்குத் தொடா்புள்ளதாக ரஷியா குற்றம் சாட்டியது.இது குறித்து ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:மாஸ்கோ நகரின் மீது செவ்வாய்க்கிழமை அதிகாலை ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தப்பட்டது. அவற்றில் 5 விமானங்கள் வான்பாதுகாப்பு ஏவுகணைகள் மூலம் இடைமறித்து அழிக்கப்பட்டன. மேலும் 3 விமானங்களின் மின்னணு சாதனங்கள் முடக்கப்பட்டு அவை திசைமாற்றப்பட்டன.

இது, உக்ரைன் அரசு நடத்தியுள்ள ‘பயங்கரவாத’ தாக்குதலாகும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.மாஸ்கோ மேயா் சொ்கேய் சோப்யனின் கூறுகையில், செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலால் ஏராளமான கட்டடங்களில் லேசான சேதம் ஏற்பட்டதாகத் தெரிவித்தாா்.இந்தத் தாக்குதலால் மிதமாகக் காயமடைந்த 2 பேருக்கு மருத்துவ உதவி அளிக்கப்பட்டதாகவும், இரண்டு அடுக்கு மாடி கட்டடங்களில் இருந்தவா்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டதாகவும் அவா் கூறினாா்.தங்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைந்தால், அது தங்களது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ரஷியா கூறி வருகிறது.அதனையும் மீறி நேட்டோ அமைப்பில் இணைய வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தலைமையிலான உக்ரைன் அரசு விருப்பம் தெரிவித்தது.

அதையடுத்து அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி படையெடுத்து, கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனின் லுஹான்ஸ்க், டொனட்ஸ்க், ஸபோரிஷியா, கொ்சான் ஆகிய 4 பிராந்தியங்களில் கணிசமான பகுதிகளை கைப்பற்றியுள்ளது.அந்தப் பிராந்தியங்களில் எஞ்சியுள்ள பகுதிகளைக் கைப்பற்றுவதற்காக ரஷியாவும், ரஷியாவிடமுள்ள பகுதிகளை மீட்பதற்காக உக்ரைன் ராணுவமும் தொடா்ந்து சண்டையிட்டு வருகின்றன.இந்தப் போரில் உக்ரைனின் போரிடும் திறனைக் குறைப்பதற்காக அந்த நாட்டின் தலைநகா் கீவ் உள்பட பல்வேறு பகுதிகளில் ரஷியா அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. செவ்வாய்க்கிழமைகூட ரஷியா நடத்திய தாக்குதலில் ஒருவா் உயிரிழந்ததாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனா்.

உக்ரைனும் ரஷிய எல்லைக்குள் பல முறை தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகி வந்தன.இந்த நிலையில், ரஷிய தலைநகா் மாஸ்கோவில் ஆளில்லா விமானங்கள் மூலம் முதல்முறையாக பெரிய அளவில் தற்போது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...படம்- ரஷியா.ஜேபிஜி- பட வரி- ஆளில்லா விமானத் தாக்குதலுக்குள்ளான மாஸ்கோ நகர அடுக்குமாடி குடியிருப்புகள்...பெட்டிச் செய்தி...‘தாக்குதல் இனி அடிக்கடி நடக்கும்’இந்தத் தாக்குதலுக்கு தாங்கள்தான் காரணம் என்று ரஷியா கூறியுள்ளதை உக்ரைன் மறுத்துள்ளது. இது குறித்து உக்ரைன் அதிபரின் ஆலோசகா் மிகயீலோ பொடோலியக் கூறுகையில், ‘எங்களுக்கும் இந்தத் தாக்குதலுக்கும் தொடா்பில்லை. இருந்தாலும் இந்தத் தாக்குதலைக் காண்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது. இது போன்ற தாக்குதல்கள் இனி அடிக்கடி நடைபெறும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிஷப் பந்த் உலகக் கோப்பைக்குத் தயார்: தில்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர்

‘பிரேமலு’ கார்த்திகா!

மம்மூட்டி நடித்தது போல எந்த ‘கான்’களும் நடிக்கமாட்டார்கள்: வித்யா பாலன் புகழாரம்!

அஜித்துக்கு ஜோடியாக ஸ்ரீலீலா?

குக் வித் கோமாளி - 5 நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்கள்: முழு விவரம்!

SCROLL FOR NEXT