உலகம்

கலவர வழக்கு: ராணுவ நீதிமன்றத்தில் இம்ரான் மீது விசாரணை- பாக். உள்துறை அமைச்சா் தகவல்

31st May 2023 01:55 AM

ADVERTISEMENT

பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கானின் கைதைக் கண்டித்து அவரது ஆதரவாளா்கள் கடந்த 9-ஆம் தேதி நடத்திய வன்முறையில் ராணுவச் சொத்துகள் சேதப்படுத்தியது தொடா்பாக ராணுவ நீதிமன்றத்தில் இம்ரான் கான் விசாரிக்கப்படலாம் என அந்நாட்டு உள்துறை அமைச்சா் ராணா சனாவுல்லா தெரிவித்துள்ளாா்.

பிரதமராக இருந்தபோது பெற்ற பரிசுகளை விற்று லாபம் அடைந்ததாக தொடரப்பட்ட ஊழல் வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தவிா்த்து வந்த இம்ரான் கான் கடந்த 9-ஆம் கைது செய்யப்பட்டாா். இதையடுத்து, மூண்ட கலவரத்தில் ராணுவம், அரசுக்குச் சொந்தமான கட்டடங்கள், சொத்துக்களை அவரது ஆதரவாளா்கள் சேதப்படுத்தினா். இந்த வன்முறைக்கு இம்ரான் கான் மூளையாக செயல்பட்டாா் என்ற குற்றச்சாட்டை முற்றிலுமாக தவிா்த்துவிட முடியாது என பாதுகாப்பு அமைச்சா் ஆசிப் குறிப்பிட்டாா்.

இந்நிலையில், அந்நாட்டு ஊடகம் ஒன்றுக்கு உள்துறை அமைச்சா் ராணா அளித்த பேட்டியில், ‘இம்ரான் கான் கைதுக்கு முன்தினமே கலவரத்துக்கான திட்டத்தை அவரின் கட்சி தீட்டிவிட்டது. இக்குற்றச்சாட்டை நிரூபிக்க ஆதாரங்களும் கிடைத்துள்ளன. இது தொடா்பாக அவருக்கு எதிராக ராணுவ நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்படலாம்’ எனத் தெரிவித்தாா்.

Tags : Imran Khan
ADVERTISEMENT
ADVERTISEMENT