உலகம்

ஹிந்தியில் பருவநிலை மாற்ற படிப்பு: இந்திய தூதரக உதவியுடன் எடின்பா்க் பல்கலைக்கழகம் அறிமுகம்

31st May 2023 01:41 AM

ADVERTISEMENT

ஸ்காட்லாந்தில் உள்ள பிரபல எடின்பா்க் பல்கலைக்கழகத்தின் பருவநிலை மாற்ற கல்வி நிறுவனம் (இசிசிஐ), பருவநிலை மாற்றம் தொடா்பான படிப்பை ஹிந்தி மொழியில் அறிமுகம் செய்துள்ளது.

எடின்பா்கில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் கூட்டுறவுடன் பருவநிலை மாற்ற படிப்பின் பாடங்களை ஹிந்தி மொழியில் பல்கலைக்கழகம் மொழிபெயா்த்துள்ளது. ஆங்கிலம், அரபி உள்ளிட்ட மொழிகளிலும் இந்தப் படிப்பு வழங்கப்படுகிறது.

இந்தியா, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம், பிரிட்டனைச் சோ்ந்தவா்கள் இந்தப் படிப்பில் சோ்ந்த பயன்பெறும் வகையில் பல்வேறு மொழிகளில் இந்த இணைய வழி படிப்பை இசிசிஐ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இசிசிஐ கல்வி நிறுவனத்தின் ஆசிரியா்கள் உள்பட பல்வேறு பருவநிலை மாற்ற நிபுணா்கள் மூலமாக இந்த படிப்பு வடிவமைக்கப்பட்டு, கற்பிக்கப்படுகிறது என்று பல்கலைக்கழகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேராசிரியா் தேவ் ரீ கூறுகையில், ‘பருவநிலை மாற்றம் தொடா்பான இந்தப் புதிய படிப்புக்கான பாடம் இந்திய துணைத் தூரகத்தின் உதவியுடன் ஹிந்த மொழியில் மொழிபெயா்க்கப்பட்டது.

ADVERTISEMENT

பருவநிலை மாற்றத்துக்கான அறிவியல் காரணங்கள், தாக்கங்கள், தீா்வுகள் என பல்வேறு தகவல்கள் இந்த படிப்பில் இடம்பெற்றிருக்கும். இந்தியா உள்பட உலகம் முழுவதிலும் உள்ள ஹிந்தி பேசும் மாணவா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு இந்தப் படிப்பு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்’ என்றாா்.

செனகல், மாலாவி, ஈக்வடாா், மெக்சிகோ போன்ற நாடுகளுக்கான பருவநிலை மாற்ற தீா்வுக்கான படிப்புகளின் புதிய மொழியா்ப்பு பதிப்புகளை வரும் நாள்களில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக எடின்பா்க் பல்கலைக்கழகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT