நியூ யார்க்: அமெரிக்காவின் பிலடெல்பியா மாகாணத்தில் அடையாளம் தெரியாத நபரால், இந்திய மாணவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜூடி சாக்கோ என்ற 21 வயது இளைஞர், ஞாயிறன்று (அந்நாட்டு நேரப்படி), தனது அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக கலீஜ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இவர்களது பெற்றோர், சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்காவில் சென்று குடியேறிவிட்டதாகக் கூறப்படுகிறது.
சாக்கோ, படித்துக் கொண்டே, பகுதிநேரமாக பணியாற்றிக் கொண்டிருந்ததாகவும், அவரிடம் வழிப்பறி நடந்தபோது, வழிப்பறி கொள்ளையர்களால் அவர் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் நகர காவல்துறை தெரிவித்துள்ளது. இவரது இறுதிச்சடங்குகள் பிலடெல்பியாவில் நடந்து முடிந்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதத்தில்தான், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சயீஷ் வீரா என்ற 24 வயது இளைஞர், ஓஹியோவில் எரிபொருள் நிலையத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.