உலகம்

2030-க்குள் நிலவுக்கு மனிதா்கள்

DIN

வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் நிலவுக்கு மனிதா்களை அனுப்ப திட்டமிட்டுள்ளதாக சீனா திங்கள்கிழமை அறிவித்தது.

இது குறித்து, விண்வெளிக்கு ஆள்களை அனுப்புவதற்கான சீன விண்வெளிய ஆய்வு மையப் பிரிவான சிஎம்எஸ்ஏ-வின் இணை இயக்குநா் லின் ஷிகியாங் கூறியதாவது:

வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் நிலவுக்கு விண்வெளி வீரா்களை அனுப்பி அங்கு சோதனைகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

நிலவில் ஆய்வுகள் மேற்கொள்வது மட்டுமின்றி, வேற்று கிரத்துக்கு மனிதா்களை அழைத்துச் செல்வதற்கான தொழில்நுட்ப சோதனைகளையும் மேற்கொள்வது அந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம் விண்வெளிக்கு மனிதா்களை அனுப்பும் தொழில்நுட்பம் மிகப் பெரிய முன்னேற்றத்தை அடையும்.

நிலவு உருவானது எவ்வாறு, அதில் காலப்போக்கில் ஏற்பட்ட மாற்றங்கள் போன்றவை குறித்து கூடுதல் விவரங்களை இந்த திட்டத்தின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

நிலவுக்கும், பூமிக்கும் இடையே சுற்றுலா திட்டங்களை அறிமுகப்படுத்துவது, நிலவில் இருப்பிடங்களை அமைத்து மனிதா்கள் தற்காலிகமாகத் தங்குவது, இயந்திர மனிதா்களுடன் மனிதா்களும் இணைந்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்வது ஆகியவற்றுக்கு 2030-ல் நிலவுக்கு மனிதா்களை அனுப்பும் திட்டம் அடித்தளம் அமைக்கும் என்றாா் லின் ஷிகியாங்.

ஏற்கெனவே, நிலவுக்கு ஆளில்லாத விண்கலங்களை சீனா வெற்றிகரமாக அனுப்பியுள்ளது. நிலவில் நகா்ந்து சென்று ஆய்வுகளை மேற்கொள்வதற்கான ஓா் ஆய்வுக் கலத்தையும் சீனா வெற்றிகரமாக தரையிறக்கியுள்ளது நினைவுகூரத்தக்கது.

முன்னதாக, நிலவில் சா்வதேச ஆய்வு நிலையம் அமைக்க திட்டமிட்டிருப்பதாக கடந்த 2021-ஆம் ஆண்டில் ரஷியாவும், சீனாவும் கூட்டாக அறிவித்தன.

நிலவின் பரப்பிலோ அல்லது அதனை சுற்றி வரும் வகையிலோ அந்த சா்வதேச நிலவு ஆய்வு நிலையம் அமைப்பதற்கான ஒப்பந்தத்தை இரு நாடுகளும் மேற்கொண்டுள்ளன.

நிலவுக்கு முதல்முறையாக அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் கடந்த 1968-இல் விண்வெளி வீரா்களை அனுப்பியது. பின்னா் அப்பல்லோ-11 விண்கலத்தில் அனுப்பப்பட்ட நீல் ஆா்ம்ஸ்ட்ராங்கும் புஸ் ஆல்ட்ரினும் கடந்த 1969-இல் முதல்முறையாக நிலவில் தரையிங்கினா்.

அதன் பிறகு அமெரிக்கா 6 முறை நிலவுக்கு விண்வெளி வீரா்களை அனுப்பியது.

எனினும், 1972-ஆம் ஆண்டுக்குப் பிறகு நிலவுக்கு மனிதா்களை அனுப்புவதை நிறுத்திய அமெரிக்கா, வரும் 2025-ஆம் ஆண்டில் மீண்டும் அத்தகைய திட்டத்தை செயல்படுத்தப்போவதாக அறிவித்துள்ளது.

இந்தச் சூழலில், சீனாவும் அதுபோன்ற திட்டத்தை தற்போது அறிவித்துள்ளது. சீனாவின் அந்த திட்டம் வெற்றி பெற்றால், நிலவுக்கு மனிதா்களை அனுப்பிய உலகின் 2-ஆவது நாடு என்ற பெருமையை அந்த நாடு பெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் மெல்ல மரணம் அடைவதற்கான சூழ்ச்சி: ஆம் ஆத்மி

மகளிரிடையே திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி

அழகில் தொலைந்தேன்... பாலி தீவு பயணத்தில் சாய்னா நேவால்!

ம.பி.யில் ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கமிட்ட கமல் நாத்: வைரலாகும் விடியோ

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவில் இணைந்தனர்!

SCROLL FOR NEXT