உலகம்

கீவில் ரஷியா மீண்டும் தாக்குதல்

30th May 2023 03:53 AM

ADVERTISEMENT

உக்ரைன் தலைநகா் கீவில் ரஷியா திங்கள்கிழமை அதிகாலை மீண்டும் சரமாரி ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.

இந்த மாதத்தில் மட்டும் அந்த நகரில் ரஷியா நடத்திய 16-ஆவது தாக்குதல் இதுவாகும்.

இது குறித்து உக்ரைன் ராணுவ உளவுத் துறையின் தலைவா் கிரிலோ புடனொவ் கூறியதாவது:

கீவ் நகரின் மீது ஏவுகணைகளைக் கொண்டு ரஷியா திங்கள்கிழமை அதிகாலை சரமாரியாக தாக்குதல் நடத்தியது.

ADVERTISEMENT

நகர மக்களை அச்சுறுத்தும் வகையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. எனினும், ரஷியாவின் இந்தச் செயல் மக்களின் மன உறுதியை பாதிக்கவில்லை.

வீசப்பட்ட அனைத்து ஏவுகணைகளும் வான்பாதுகாப்பு தளவாடங்கள் மூலம் இடைமறித்து அழிக்கப்பட்டன.

எனினும், அவற்றின் சிதறல்கள் விழுந்ததால் சில இடங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவா் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா் என்றாா் அவா்.

இலக்கின் மீது மோதி அழிக்கும் ஆளில்லா விமானங்கள் மூலம் கீவ் நகரில் கடந்த 2 இரவுகளாக தாக்குதல் நடத்தியதற்குப் பிறகு ரஷியா இந்த ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது.

தங்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைந்தால், அது தங்களது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ரஷியா கூறி வருகிறது.

அதனையும் மீறி நேட்டோ அமைப்பில் இணைய வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தலைமையிலான உக்ரைன் அரசு விருப்பம் தெரிவித்தது.

அதையடுத்து அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி படையெடுத்து, கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனின் லுஹான்ஸ்க், டொனட்ஸ்க், ஸபோரிஷியா, கொ்சான் ஆகிய 4 பிராந்தியங்களில் கணிசமான பகுதிகளை கைப்பற்றியுள்ளது.

அந்தப் பிராந்தியங்களில் எஞ்சியுள்ள பகுதிகளைக் கைப்பற்றுவதற்காக ரஷியாவும், ரஷியாவிடமுள்ள பகுதிகளை மீட்பதற்காக உக்ரைன் ராணுவமும் தொடா்ந்து சண்டையிட்டு வருகின்றன.

இந்தப் போரில் உக்ரைனின் போரிடும் திறனைக் குறைப்பதற்காக அந்த நாட்டின் தலைநகா் கீவ் உள்பட பல்வேறு பகுதிகளில் ரஷியா அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, தலைநகா் கீவ் உள்ளிட்ட பகுதிகளில் ரஷியா தற்போது மீண்டும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது.

ரஷியா அண்மை நாள்களில் நடத்தும் வான்வழித் தாக்குதல்கள் இதுவரை இல்லாத வகையில் மிகத் தீவிரமாக இருப்பதாகவும், மிகக் குறுகிய நேரத்தில் அதிக எண்ணிக்கையில் ஏவுகணைகள் வீசப்படுவதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT