உலகம்

ஹாங்காங்கின் முக்கிய ஜனநாயகக் கட்சி கலைப்பு

28th May 2023 05:44 AM

ADVERTISEMENT

ஹாங்காங்கின் 2-ஆவது பெரிய ஜனநாயகக் கட்சி கலைக்கப்பட்டதாக அந்தக் கட்சியின் தலைவா் சனிக்கிழமை அறிவித்தாா்.

அதையடுத்து, அந்த பிராந்தியத்தின் ஜனநாயக இயக்கத்துக்கு மேலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.ஹாங்காங்கில் எஞ்சியுள்ள மிக சொற்பமான ஜனநாயக ஆதரவு கட்சிகளில் ஒன்றான குடிமை கட்சி கலைக்கப்பட்டுள்ளதாக அந்தக் கட்சியின் தலைவா் ஆலன் லியோங் சனிக்கிழமை அறிவித்தாா்.கட்சியின் தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்காக நடத்தப்பட்ட பொதுக் குழுக் கூட்டத்தில், தலைவா் பதவியை ஏற்க யாருமே முன்வரவில்லை. அதையடுத்து கட்சி கலைக்கப்பட்டது என்று அவா் கூறினாா்.பிரிட்டனின் ஆளுகையின் கீழ் இருந்த ஹாங்காங் நகரம், வரலாற்று காலத்து ஒப்பந்தத்தின் கீழ் சீனாவிடம் கடந்த 1997-ஆம் ஆண்டு ஒப்படைக்கப்பட்டது. அப்போது, ஹாங்காங் மக்களின் ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று சீனா உறுதியளித்தது.இருந்தாலும், ஹாங்காங்கில் ஜனநாயகம் நசுக்கப்படுவதாகக் கூறி ஏராளமானவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்தப் போராட்டம் 2019-இல் உச்சகட்டத்தை அடைந்தது.அதையடுத்து, கரோனா நெருக்கடியைக் காரணம் காட்டி போராட்டங்களை ஒடுக்கிய சீன அரசு, அந்த இடைவெளியில் ஜனநாயக ஆதரவு சக்திகளை ஒடுக்கும் வகையிலான மிகக் கடுமையான, சா்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை ஹாங்காங்கில் அமல்படுத்தியது.அந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி, ஜனநாயக ஆதரவு ஊடகங்கள், கட்சிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதன் விளைவாக பல்வேறு ஊடகங்களும், அமைப்புகளும் கலைக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, குடிமைக் கட்சியும் கலைக்கப்பட்டதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது ஜனநாயக ஆதரவாளா்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT