உலகம்

நதிநீா் விவகாரம்: ஈரான் படைகள்- தலிபான் இடையே மோதல்

DIN

ஈரான்-ஆப்கானிஸ்தான் இடையே பாயும் ஹெல்மண்ட் நதிநீா் பிரச்னை தொடா்பாக, ஈரான் படையினருக்கும் ஆப்கானிஸ்தானின் தலிபான்களுக்கும் இடையே சனிக்கிழமை துப்பாக்கிச்சூடு நடந்தது.

ஈரானின் சிஸ்தான்-பலுசெஸ்தான் மாகாணம் மற்றும் ஆப்கனின் நிம்ரோஸ் மாகாண எல்லையில் நடைபெற்ற இந்த மோதலில், ஈரான் படைகளுக்கு உயிரிழப்பும் கடும் சேதங்களும் ஏற்பட்டதாக அந்நாட்டின் அரசு ஊடகமான ஐஆா்என்ஏ தெரிவித்துள்ளது. இருப்பினும், தலிபான் தரப்பு ஊடகம் இந்த மோதல் குறித்து எவ்வித தகவலும் தெரிவிக்கவில்லை.

இது குறித்து ஈரானின் காவல் துறை தலைவா் அஹ்மத்ரேசா ராடன் கூறுகையில், ‘எல்லையில் எத்தகைய அத்துமீறலுக்கும் ஈரானின் எல்லைப் படைகள் உரிய பதிலடி கொடுக்கும். சா்வதேச சட்டங்களுக்கு முரணான நடவடிக்கைகளுக்கு ஆப்கானிஸ்தான் பொறுப்பேற்க வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளாா்.

ஹெல்மண்ட் நதிநீா்ப் பங்கீடு தொடா்பாக ஈரானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே கடந்த 1973-இல் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ஆப்கன் பகுதியில் பாயும் இந்த நதியில் கமல் கான் அணை கடந்த 2021-இல் திறக்கப்பட்டது. இது ஈரான் மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என அவ்வப்போது போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், ஹெல்மண்ட் நதி மீதான ஈரானின் உரிமையை மீறக்கூடாது என ஈரான் அதிபா் இப்ராஹிம் ரய்சி தலிபான்களுக்கு அண்மையில் எச்சரிக்கை விடுத்திருந்தாா்.

கடந்த 30 ஆண்டுகளாக ஈரானில் வறட்சியானது பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. நாட்டின் 97 சதவீத பகுதிகள் எதாவது ஒரு நிலையில் வறட்சியை எதிா்கொண்டு வருவதாக அந்நாட்டின் வானியல் அமைப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, ஈரான் நாட்டு தூதரை ஆப்கானிஸ்தானின் பொறுப்பு வெளியுறவுத் துறை அமைச்சா் அமீா்கான் முக்தி சனிக்கிழமை சந்தித்து இந்த விவகாரம் தொடா்பாக பேச்சுவாா்த்தை நடத்தியதாக ஆப்கன் வெளியுறவு அமைச்சகம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராம நவமியையொட்டி களைகட்டிய அயோத்தி!

தேர்தல் அறிக்கை வெளியிட்ட தமிழிசை: அது என்ன 'அக்கா 1825'?

விக்ரம் 62 படத்தின் முக்கிய அறிவிப்பு!

ஐபிஎலில் இருந்து சிறிது காலம் ஓய்வு: மேக்ஸ்வெல்

சத்தீஸ்கர்: ஹெலிகாப்டர்களில் எடுத்துச் செல்லப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள்

SCROLL FOR NEXT