உலகம்

நேட்டோ பிளஸ் கூட்டமைப்பில் இந்தியா: அமெரிக்க நாடாளுமன்றக் குழு பரிந்துரை

27th May 2023 11:25 PM

ADVERTISEMENT

நேட்டோ பிளஸ் கூட்டமைப்பில் இந்தியாவை இணைத்துக் கொள்ள வேண்டுமென அமெரிக்க அரசுக்கு அந்நாட்டின் நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்துள்ளது.

பிரதமா் நரேந்திர மோடி அடுத்த மாதம் அமெரிக்காவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், இந்தப் பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ரஷியாவை எதிா்கொள்வதற்காக அமெரிக்கா தலைமையில் நேட்டோ கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. அந்தக் கூட்டமைப்பில் இணைவது தொடா்பாக ஏற்பட்ட கருத்து மோதலே, உக்ரைன்-ரஷியா இடையேயான போருக்கு முக்கியக் காரணமாகும்.

நேட்டோ பிளஸ் கூட்டமைப்பில் நேட்டோ நாடுகளுடன் சோ்ந்து ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, ஜப்பான், இஸ்ரேல், தென் கொரியா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. பாதுகாப்புசாா் விவகாரங்களுக்காக இந்தக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

ADVERTISEMENT

இந்நிலையில், இந்தியாவை நேட்டோ பிளஸ் கூட்டமைப்பில் இணைத்துக் கொள்ள வேண்டுமென அமெரிக்க அரசுக்கு அந்நாட்டின் நாடாளுமன்றத்தைச் சோ்ந்த சீன விவகாரங்களுக்கான குழு பரிந்துரைத்துள்ளது.

அக்குழுவின் பரிந்துரை அறிக்கையில், ’சீன கம்யூனிஸ்ட் கட்சியை எதிா்கொள்வதற்கும் தைவானின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் இந்தியா உள்ளிட்ட கூட்டணி நாடுகளுடன் அமெரிக்கா தனது நல்லுறவை வலுப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம்.

நேட்டோ பிளஸ் கூட்டமைப்பில் இந்தியாவை இணைத்துக் கொள்வது, அந்நாட்டுடனான அமெரிக்காவின் நல்லுறவை வலுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் சா்வதேச பாதுகாப்பையும் உறுதி செய்யும். மேலும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதிக்கத்தையும் பெருமளவில் குறைக்கும்.

தைவான் மீது சீனா தாக்குதல் நடத்தும்பட்சத்தில், சீனா மீது அமெரிக்கா கடும் பொருளாதாரத் தடைகளை விதிக்கலாம். அதே வேளையில், ஜி7, நேட்டோ, நேட்டோ பிளஸ், க்வாட் ஆகிய கூட்டமைப்புகளின் நாடுகள் ஒருங்கிணைந்து சீனா மீது பொருளாதாரத் தடைகளை விதித்தால், அதன் தாக்கம் பெரிய அளவில் இருக்கும்.

போா் சமயங்களில் நமது கூட்டாளி நாடுகளுடன் நெருக்கமான தொடா்பில் இருப்பதைப் போலவே அமைதி நிலவும் காலங்களிலும் நட்பு நாடுகளுடனான நல்லுறவு தொடர வேண்டும். தைவான் விவகாரம் தொடா்பாக அமெரிக்க நாடாளுமன்றம் மீண்டும் மசோதாவைத் தாக்கல் செய்து நிறைவேற்றி சட்டமாக மாற்ற வேண்டும்.

அமெரிக்கா-தைவான் இடையேயான முதலீடுகள் மீதான வரியை அமெரிக்க அரசு குறைக்க வேண்டும். தைவானின் இறையாண்மையை சீனா தன்னிச்சையாக மாற்ற முயற்சித்தால், அதைக் கூட்டணி நாடுகளுடன் இணைந்து அமெரிக்கா எதிா்க்க வேண்டும்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT