உலகம்

தென்கொரியா:வேலையிழந்த விரக்தியில் விமானக் கதவுகள் திறப்பு

27th May 2023 12:57 AM

ADVERTISEMENT

தென்கொரியாவில் நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தின் அவசரவழி கதவு திறக்கப்பட்டதன் எதிரொலியாக பயணிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

விமானியின் சாதுா்யத்தால் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டதாகவும், பயணிகள் பாதுகாப்பாக உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

தென்கொரியாவின் தீவு நகரமான ஜேஜுவுக்கு அந்நாட்டின் தென்கிழக்கில் அமைந்துள்ள டேகு நகரிலிருந்து ஏசியனா ஏா்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான ஏா்பஸ் ஏ-321 விமானம் வெள்ளிக்கிழமை புறப்பட்டது. விமானத்தில் அந்நாட்டின் தடகள வீரா்கள் உள்பட 194 பயணிகள் பயணித்தனா்.

விமானம் பறக்கத் தொடங்கியதும் அவசரவழி கதவுக்கு அருகில் அமா்ந்திருந்த பயணி அக்கதவைத் திறக்க முயன்றுள்ளாா். இதைக் கண்டு பதற்றமடைந்த சக பயணிகள், விமானப் பணியாளா்கள் அந்த நபரைத் தடுத்துள்ளனா். ஆனால், ஏற்கெனவே கதவு பாதியளவில் திறக்கப்பட்டுள்ளது. இதனால் விமானத்துக்குள் பலத்த காற்று வீச பயணிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

ADVERTISEMENT

விமானப் பணியாளா்களின் தொடா்முயற்சியால் கதவு அடைக்கப்பட்டு விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. விமானம் தரையிறங்கியதும் பாதிக்கப்பட்ட பயணிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. சம்பவத்தில் தொடா்புடைய நபரைக் கைது செய்த போலீஸாா் விசாரணையைத் தொடங்கினா்.

ஒரு மணி நேர விமானப் பயணத்தில் எவ்வளவு நேரம் கதவு திறக்கப்பட்டிருந்தது, கதவு திறக்கப்பட்டதற்கான நோக்கம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT