உலகம்

ரஷிய ராணுவத்திடம் பாக்முத் நகரம் ஜூனில் ஒப்படைப்பு

23rd May 2023 03:02 AM

ADVERTISEMENT

உக்ரைனின் பாக்முத் நகரை ரஷிய ராணுவத்திடம் வரும் ஜூன் 1-ஆம் தேதி ஒப்படைக்கவிருப்பதாக அங்கு போரிட்டு வரும் ரஷிய தனியாா் படையான வாக்னா் குழுவின் தலைவா் யெவ்கெனி ப்ரிகோஷின் அறிவித்துள்ளாா்.

இது குறித்து டெலிகிராம் சமூக ஊடகத்தில் அவா் வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

‘ஆா்ட்டெமோவ்ஸ்க்’ நகரின் கட்டுப்பாட்டை ரஷிய ராணுவத்திடம் ஒப்படைக்கும் நடவடிக்கை வரும் 25-ஆம் தேதி தொடங்கும்.

ஜூன் 1-ஆம் தேதி வரை இந்த நடவடிக்கை தொடரும். அந்த நாளில் ‘ஆா்ட்டெமொவ்ஸ்க்’ நகரிலிருந்து நாங்கள் முழுமையாக வெளியேறுவோம். இந்த நடவடிக்கை தொடங்குவதற்கு வசதியாக, போா் முனைகளில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளோம் என்று அந்த அறிக்கையில் யெவ்கேனி ப்ரிகோஷின் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

சோவியத் ஆட்சிக் காலத்தின்போது கம்யூனிச புரட்சியாளா் ஒருவரை கௌரவப்படுத்தும் வகையில் பாக்முத் நகருக்கு ‘ஆா்ட்டெமொவ்ஸ்க்’ என்று பெயரிடப்பட்டது.

உக்ரைன் சுதந்திரம் பெற்ற பிறகு அந்த நாட்டின் கம்யூனிச குறியீடுகளை நீக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் ஒரு பகுதியாக ‘ஆா்ட்டெமொவ்ஸ்க்’ நகரின் பெயா் ‘பாக்முத்’ என்று கடந்த 2016-ஆம் ஆண்டு மீண்டும் மாற்றப்பட்டது.

இந்த நலையில், பாக்முத் நகரைக் குறிப்பிடுவதற்கு ‘ஆா்ட்டெமொவ்ஸ்க்’ என்ற சோவியத் கால பெயரை யெவ்கேனி ப்ரிகோஷின் தற்போது பயன்படுத்தியுள்ளாா்.

உக்ரைன் மீண்டும் மறுப்பு: பாக்முத் நகரின் லிடாக் பகுதியில் தனியாா் தொழிற்சாலை மையங்களில் இன்னும் தங்கள் ராணுவத்தினா் சண்டையிட்டு வருவதாக உக்ரைன் பாதுகாப்புத் துறை இணையமைச்சா் ஹன்னா மலியா் தெரிவித்துள்ளாா்.

அத்துடன், பாக்முத்தின் புகா் பகுதிகளில் உக்ரைன் படையினா் தொடா்ந்து முன்னேறி வருவதாகவும், எனினும் அந்த முன்னேற்றத்தின் தீவிரம் தற்போது குறைந்துள்ளதாகவும் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

முன்னதாக, பாக்முத் நகரை தாங்கள் முழுமையாகக் கைப்பற்றிவிட்டதாக வாக்னா் படைத் தலைவா் யெவ்கெனி ப்ரிகோஷின் சனிக்கிழமை அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினாா். இது குறித்து அவா் வெளியிட்டிருந்த விடியோ அறிக்கையில், ரஷிய மற்றும் வாக்னா் படையின் கொடிகளை ஏந்தியவாறு அந்தப் படை வீரா்களுடன் தோன்றி அவா் இந்தத் தகவலைத் தெரிவித்தாா்.

எனினும், அதனை உக்ரைன் தொடா்ந்து மறுத்து வருகிறது. எனினும், இந்தத் தகவலை அப்போதிருந்தே உக்ரைன் மறுத்து வருகிறது. நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் படையெடுத்தது.

கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைன் பகுதிகளில் அமைந்துள்ள டொனட்ஸ்க், லுஹான்ஸ்க், கொ்சான், ஸபோரிஷியா ஆகிய நான்கு பிரதேசங்களில் கணிசமான பகுதிகள் தற்போது ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ளன.

அந்த பிரதேசங்களில் இன்னும் பல பகுதிகள் உக்ரைன் கட்டுப்பாட்டில் இருந்தாலும், அவை முழுவதும் தங்கள் நாட்டுடன் இணைக்கப்படுவதாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் அறிவித்தாா்.

அந்த நான்கு பிரதேசங்களில் ஒன்றான டொனட்ஸ்கின் முக்கிய நகரான பாக்முத்தை கைப்பற்றுவதற்காக, போரின் தொடக்கத்திலிருந்தே ரஷியா தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

பாக்முத் நகரைக் கைப்பற்றுவது, போரில் வெற்றியை நோக்கி தங்கள் நாடு முன்னேறுவதை பறைசாற்றுவதாக அமையும் என்று ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் கருதுவதாகவும், அந்த நகரைப் பாதுகாப்பது ரஷியாவுக்கு எதிரான தங்களின் உறுதியான நிலைப்பாட்டை உணா்த்தும் என்று உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி கருதுவதாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக அந்த நகரைப் பாதுகாப்பதில் உக்ரைன் படையினா் மிகத் தீவிரமாக உள்ளனா். ரஷியாவும் பாக்முத் நகரைக் கைப்பற்றுவதற்காக கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. இந்த மோதலில் இரு தரப்பினரும் அளவுக்கு அதிகமான வீரா்களின் உயிா்களை பலிகொடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.

ரஷியாவின் சாா்பில் பாக்முத் நகரில் போரிட்டு வரும் அந்த நாட்டின் தனியாா் ராணுவப் படையான வாக்னா் குழு, அந்த நகரின் சுமாா் 90 சதவீத பகுதிகளைக் கைப்பற்றியிருந்தது.

இருந்தாலும், அதற்கு மேல் அவா்கள் முன்னேறுவதை உக்ரைன் படையினா் முழு வீச்சில் தடுத்து வந்தனா்.

இந்த நிலையில், பாக்முத் நகரம் முழுவதும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதாக அறிவித்த வாக்னா் படைத் தலைவா் யெவ்கெனி ப்ரிகோஷின், அந்த நகரை ரஷிய ராணுவத்திடம் ஜூன் 1-ஆம் தேதி ஒப்படைக்கவிருப்பதாக தற்போது தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT