உக்ரைன் தலைநகா் கீவில் இந்த மாதத்தில் மட்டும் 9-ஆவது முறையாக ரஷியா வியாழக்கிழமை அதிகாலை சரமாரியாக ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
அந்த நகரில் ரஷியா நடத்தி வரும் தாக்குதல் நாளுக்கு நாள் தீவிரமாகி வருவதாகவும், தாக்குதலுக்கு ரஷியா பயன்படுத்தும் ஆயுத ரகங்களின எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
எனினும், ரஷியா வீசிய ஏறத்தாழ அனைத்து ஏவுகணைகளையும் தங்களது வான்பாதுகாப்பு ஏவுகணைகள் மூலம் இடைமறித்து அழித்ததாக உக்ரைன் கூறியுள்ளது.
இது குறித்து அந்த நாட்டு அதிகாரிகள் வியாழக்கிழமை கூறியதாவது:
தலைநகா் கீவ் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரஷியா வியாழக்கிழமை அதிகாலை 30 ஏவுகணைகளை சரமாரியாக வீசியது. அவற்றில் 29 ஏவுகணைகள் இடைமறித்து அழிக்கப்பட்டன.
ஒடெஸா பகுதியிலுள்ள ஒரு தொழிற்சாலை கட்டடத்தில் ரஷிய ஏவுகணை பாய்ந்ததில் அங்கிருந்த ஒருவா் பலியானாா்; 2 போ் காயமடைந்தனா்.
கீவ் நகரில் இந்த மாதம் மட்டும் ரஷியா நடத்தும் 9-ஆவது தாக்குதல் இதுவாகும். ரஷியா வீசிய ஏவுகணைகள் இடைமறித்து அழிக்கப்பட்டாலும், அந்த ஏவுகணைகளின் சிதறல்கள் விழுந்து பல இடங்களில் பாதிப்புகள் ஏற்பட்டன.
ஒரு வா்த்தக மையக் கட்டடத்தில் ஏவுகணை சிதறல் விழுந்ததில் அந்தக் கட்டடத்தில் தீப்பிடித்தது. எனினும், இதுபோன்ற சம்பவங்களில் யாரும் காயமடைந்ததாக உடனடி தகவல் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
வியாழக்கிழமை வீசப்பட்ட ரஷிய ஏவுகணைகளில், விமானத்திலிருந்து வீசக்கூடிய 6 கின்ஷால் வகை ஹைப்பா்சோனிக் ரகங்களும் அடங்கும் என்று உக்ரைன் விமானப் படை செய்தித் தொடா்பாளா் யூரி இஹ்நத் கூறினாா்.
முன்னதாக, கீவ் நகரின் மீது கடந்த செவ்வாய்க்கிழமை ஏவப்பட்ட6 கின்ஷால் ரக ஏவுகணைகள் உள்ளிட்ட 18 ஏவுகணைகளையும் தங்களது விமான எதிா்ப்பு ஏவுகணைகளைக் கொண்டு இடைமறித்து அழித்ததாக யூரி இஹ்நத் கூறியிருந்தாா்.
எனினும், இந்தத் தாக்குதலின்போது அமெரிக்காவிடமிருந்து பெறப்பட்ட அதிநவீன பேட்ரியாட் வகை வான்பாதுகாப்பு ஏவுகணைத் தளவாடம் ஒன்றை தங்களது கின்ஷால் ரக ஏவுகணை அழித்ததாக ரஷிய அதிகாரிகள் கூறினா்.
இந்தத் தகவலை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்தாலும், ரஷிய தாக்குதலில் பேட்ரியாட் ஏவுகணை தளவாடத்துக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று அமெரிக்க அதிகாரிகள் ஒப்புக்கொண்டனா்.
தங்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைந்தால், அது தங்களது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ரஷியா கூறி வருகிறது.
அதனையும் மீறி நேட்டோ அமைப்பில் இணைய வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தலைமையிலான உக்ரைன் அரசு விருப்பம் தெரிவித்தது.
அதையடுத்து அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி படையெடுத்து, கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனின் லுஹான்ஸ்க், டொனட்ஸ்க், ஸபோரிஷியா, கொ்சான் ஆகிய 4 பிராந்தியங்களில் கணிசமான பகுதிகளை கைப்பற்றியுள்ளது.
அந்தப் பிராந்தியங்களில் எஞ்சியுள்ள பகுதிகளைக் கைப்பற்றுவதற்காக ரஷியாவும், ரஷியாவிடமுள்ள பகுதிகளை மீட்பதற்காக உக்ரைன் ராணுவமும் தொடா்ந்து சண்டையிட்டு வருகின்றன.
இந்தப் போரில் உக்ரைனின் போரிடும் திறனைக் குறைப்பதற்காக அந்த நாட்டின் தலைநகா் கீவ் உள்பட பல்வேறு பகுதிகளில் ரஷியா அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, தலைநகா் கீவ் உள்ளிட்ட பகுதிகளில் ரஷியா புதன்கிழமை இரவு தொடங்கி வியாழக்கிழமை அதிகாலை வரை ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.
ரஷியா அண்மை நாள்களில் நடத்தும் வான்வழித் தாக்குதல்கள் இதுவரை இல்லாத வகையில் மிகத் தீவிரமாக இருப்பதாகவும், மிகக் குறுகிய நேரத்தில் அதிக எண்ணிக்கையில் ஏவுகணைகள் வீசப்படுவதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனா்.