பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளித்த வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதிக்கு ஜம்மு-காஷ்மீா் நீதிமன்றம் ஒரு மாதம் அவகாசம் அளித்துள்ளது.
இதுதொடா்பாக ஜம்மு-காஷ்மீரின் மாநில புலனாய்வு முகமை (எஸ்ஐஏ) அதிகாரி ஒருவா் தெரிவித்ததாவது:
ஜம்மு-காஷ்மீரில் உள்ள பதா்வா பகுதியைச் சோ்ந்தவா் முகமது ஹுசேன் கதீப். ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத இயக்கத்தைச் சோ்ந்த இவா், தற்போது பாகிஸ்தானில் தலைமறைவாகி உள்ளாா்.
ஜம்மு-காஷ்மீா் முன்னாள் அமைச்சா் ஜதிந்தா் சிங், முகமது ஹுசேன் கதீப் உள்ளிட்டோருக்கு எதிராக பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளித்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடா்பாக விசாரணை மேற்கொண்ட எஸ்ஐஏ, ஜதிந்தா் சிங், கதீப் உள்ளிட்டோருக்கு எதிராக ஜம்முவில் உள்ள அமா்வு நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது.
இந்நிலையில், வழக்கு விசாரணைக்கு கதீப் 30 நாள்களுக்குள் நேரில் ஆஜராக அமா்வு நீதிமன்றம் அவகாசம் அளித்து உத்தரவிட்டுள்ளது. அவா் நேரில் ஆஜராக தவறினால், அவருக்கு எதிராக குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 83-இன் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, அவரின் சொத்துகள் முடக்கப்படும் என்று தெரிவித்துள்ளாா்.
இந்த வழக்கு தொடா்பாக ஜதிந்தா் சிங் கைது செய்யப்பட்டு ஜம்முவில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.