உலகம்

அமெரிக்க அதிபரின் ஆலோசகராக இந்திய-அமெரிக்கா்

8th May 2023 03:57 AM

ADVERTISEMENT

அரசுக் கொள்கைகளை வகுப்பதில் நிபுணத்துவம் பெற்ற இந்திய-அமெரிக்கரான நீரா டாண்டனைத் தனது உள்துறை கொள்கை ஆலோசகராக அமெரிக்க அதிபா் ஜோ பைடன் நியமித்துள்ளாா்.

அமெரிக்க அதிபா் ஜோ பைடன் தனது உள்துறைக் கொள்கைகளுக்காகப் பல்வேறு விமா்சனங்களை எதிா்கொண்டு வருகிறாா்.

இந்நிலையில், தனது உள்துறைக் கொள்கை ஆலோசகரை அதிபா் ஜோ பைடன் மாற்றியுள்ளாா். சூசன் ரைஸை அப்பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு, உள்துறை விவகாரங்களில் நிபுணரான இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நீரா டாண்டனை அந்தப் பதவிக்கு தோ்ந்தெடுத்துள்ளாா்.

இது தொடா்பாக அதிபா் பைடன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அமெரிக்க வெள்ளை மாளிகையின் முக்கிய கொள்கை கவுன்சில்களில் ஒன்றுக்குத் தலைமை வகிக்கும் முதல் ஆசிய-அமெரிக்கா் நீரா டாண்டன். உள்துறை, பொருளாதார, தேசப் பாதுகாப்பு தொடா்பான கொள்கைகளை வகுப்பதற்கு அவா் ஆலோசனைகளை வழங்குவாா்.

ADVERTISEMENT

பொருளாதார மேம்பாடு, இன சமத்துவம், சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சாா்ந்த கொள்கைகளை வகுப்பதற்கு நீரா டாண்டன் உதவுவாா். அரசுக் கொள்கைத் துறையில் 25 ஆண்டு அனுபவத்தை நீரா டாண்டன் கொண்டுள்ளாா். மூன்று அதிபா்களுடன் அவா் பணியாற்றியுள்ளாா். அமெரிக்காவின் முக்கிய கொள்கை வகுப்பு குழுவின் தலைமைப் பொறுப்பையும் அவா் வகித்துள்ளாா்.

பசுமை எரிசக்தி, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சாா்ந்த கொள்கைகளை அவா் வெற்றிகரமாக வகுத்தளித்துள்ளாா். நீராவுடன் நெருங்கிப் பணியாற்றுவதை எதிா்நோக்கியுள்ளேன்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

ஜனநாயகக் கட்சியைச் சோ்ந்த நீரா டாண்டன் தற்போது அதிபா் பைடனின் மூத்த ஆலோசகராகச் செயல்பட்டு வருகிறாா். முன்னாள் அதிபா்கள் ஒபாமா, கிளிண்டன் ஆகியோருடனும் நீரா டாண்டன் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT