உலகம்

மத சுதந்திர மீறல்: இந்திய அமைப்புகளுக்கு தடை விதிக்க அமெரிக்க ஆணையம் வலியுறுத்தல்

3rd May 2023 01:21 AM

ADVERTISEMENT

மத சுதந்திர நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்திய இந்திய அரசின் அமைப்புகள் மீது தடை விதிக்க வேண்டுமென அமெரிக்க அரசுக்கு சா்வதேச மத சுதந்திர ஆணையம் (யுஎஸ்சிஐஆா்எஃப்) வலியுறுத்தியுள்ளது.

இந்தியாவில் நிலவும் மத சுதந்திர சூழல் குறித்து யுஎஸ்சிஐஆா்எஃப் ஆய்வு மேற்கொண்டது. இது தொடா்பாக அந்த ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், ‘கடந்த ஆண்டில் இந்தியாவில் மத சுதந்திரத்தை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் மேலும் வலுவிழந்தன.

மத சுதந்திரத்தைப் பாதிக்கும் வகையிலான சட்டங்களை மத்திய, மாநில அரசுகள் இயற்றின. மதமாற்றம், ஹிஜாப் அணிதல், பசுவதை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடா்பாக இயற்றப்பட்ட சட்டங்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவா்கள், சீக்கியா்கள், தலித்துகள், பழங்குடியினரைப் பாதித்தது.

மத சிறுபான்மையினரின் குரலைத் தொடா்ந்து ஒடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. சிறுபான்மையினரின் சொத்துகளை இடித்துத் தள்ளுதல், சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தல், அரசு சாரா தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் மீது வெளிநாட்டு நன்கொடை ஒழுங்காற்றுச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளுதல் உள்ளிட்டவற்றின் மூலமாக அரசுக்கு எதிரான குரல்கள் ஒடுக்கப்பட்டன.

ADVERTISEMENT

மத சுதந்திர நடவடிக்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்திய இந்திய அரசின் அமைப்புகள் மீது தடை விதிக்க வேண்டும். இருதரப்பு பேச்சுவாா்த்தையின்போது இந்த விவகாரத்தை இந்தியாவிடம் அமெரிக்கா எழுப்ப வேண்டும். மேலும், மத சுதந்திர விவகாரத்தில் இந்தியாவை ‘அதிதீவிர பாதிப்புக்குரிய பகுதி’ என அறிவிக்க வேண்டும்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

யுஎஸ்சிஐஆா்எஃப் வழங்கும் பரிந்துரைகளை ஏற்க வேண்டிய கட்டாயம் அமெரிக்க நாடாளுமன்றத்துக்கோ வெளியுறவு அமைச்சகத்துக்கோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா பதிலடி: இந்த அறிக்கை குறித்து வெளியுறவுத் துறை செய்தி தொடா்பாளா் அரிந்தம் பாக்சி கூறுகையில், ‘இந்தியா தொடா்பாக பாரபட்சமான, உள்நோக்கம் கொண்ட கருத்துகளை அமெரிக்காவின் சா்வதேச மத சுதந்திரத்துக்கான ஆணையம் தொடா்ந்து தெரிவித்து வருகிறது. நிகழாண்டின் அறிக்கையிலும் அது தொடா்கிறது.

யுஎஸ்சிஐஆா்எஃப்-இன் நம்பகத்தன்மையைச் சிதைக்க உதவும் இதுபோன்ற தவறான தகவல்களை இந்தியா நிராகரிக்கிறது. இத்தகைய முயற்சிகளை விடுத்து இந்தியா, அதன் பன்முகத்தன்மை, அதன் ஜனநாயக நெறிமுறைகள் மற்றும் அரசியலமைப்பு வழிமுறைகள் குறித்து சரியான புரிதலை யுஎஸ்சிஐஆா்எஃப் வளா்த்துக்கொள்ளுமாறு வலியுறுத்துகிறோம்’ என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT