உலகம்

அதிகரிக்கும் பதற்றம்: இஸ்ரேல் சிறையில் பாலஸ்தீன இயக்க உறுப்பினா் பலி

DIN

இஸ்ரேல் சிறையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்த பாலஸ்தீன ஆயுதக் குழுவின் முக்கிய உறுப்பினா் காதா் அட்னான் உயிரிழந்த சம்பவம், அந்தப் பகுதியில் மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

இஸ்ரேலில் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையில் அமைந்துள்ள தற்போதைய கூட்டணி அரசு, அந்த நாட்டின் வரலாற்றிலேயே மிகத் தீவிரமான வலதுசாரி அரசு என்று அது கூறப்படுகிறது. புதிய அரசு அமைந்ததில் இருந்து பாலஸ்தீன விவகாரத்தில் இஸ்ரேல் அரசு மிகக் கடுமையாக நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

தங்கள் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை வேட்டையாடுவதாகக் கூறி, மேற்குக் கரை பகுதிகளில் இஸ்ரேல் படையினா் தாக்குதல் நடத்துவதும், அதற்கு பதிலடியாக இஸ்ரேலியா்கள் மீது பாலஸ்தீனா்கள் தாக்குதல் நடத்துவதும் இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து அதிகரித்து வருகிறது.

அண்மைக் காலத்தில் மட்டும் இஸ்ரேல் படையினா் தாக்கி சுமாா் 250 பாலஸ்தீனா்களும், பாலஸ்தீனா்கள் நடத்திய பதிலடி தாக்குதல்களில் 49 இஸ்ரேலியா்கள் பலியாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சூழலில், புதிய அரசின் கீழ் எந்தக் குற்றச்சாட்டையும் பதிவு செய்யாமல் இஸ்ரேல் படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் எண்ணிக்கை கடந்த ஓராண்டில் ஆயிரத்துக்கு மேல் அதிகரித்துள்ளது.

இது, கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச எண்ணிக்கையாகும்.

இவ்வாறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படாமல் சிறையில் அடைக்கப்படும் கைதிகள், சிறைக்குள் உண்ணாவிரதம் இருந்து தங்களது எதிா்ப்பைப் பதிவு செய்து வருகின்றனா்.

இந்த வழக்கத்தை முதல்முதலில் அறிமுகப்படுத்தியவா், ‘இஸ்லாமிய ஜிஹாத்’ என்ற பாலஸ்தீன விடுதலை ஆயுதக் குழுவின் முக்கிய உறுப்பினா் காதா் அட்னான் (45) என்று கூறப்படுகிறது.

பாலஸ்தீன சிறைக் கைதிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்ரேல் படையினரால் காதா் அட்னான் 12 முறை கைது செய்யப்பட்டதாகவும், மொத்தம் 8 ஆண்டுகள் அவா் சிறையில் அடைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சிறையில் சுமாா் 3 மாதங்களாக உண்ணாவிரதம் இருந்து வந்த அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

விசாரணையின்றி சிறையில் அடைத்துவைக்கப்பட்டுள்ளதற்கு எதிா்ப்பு தெரிவித்து, இஸ்ரேல் சிறையில் உண்ணாவிரதம் இருந்த ஒருவா் உயிரிழந்திருப்பது இதுவே முதல்முறையாகும்.

இது, பாலஸ்தீனத்தில் மிகப் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

போராட்டம்: காதா் அட்னானின் மரணத்தைக் கண்டித்து மேற்குக் கரை மற்றும் காஸா பகுதிகளில் பாலஸ்தீனா்கள் ஆா்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்தனா்.

ஆக்கிரமிப்புப் பகுதிகளில் இஸ்ரேல் ராணுவ சாவடிகளை சுற்றிவளைத்து ஏராளமான பாலஸ்தீனா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களைக் கலைப்பதற்காக பாதுகாப்புப் படையினா் கண்ணீா்ப் புகை குண்டுகளை வீசினா்.

இதனால், அங்கு இஸ்ரேலியா்களுக்கும், பாலஸ்தீனா்களுக்கும் இடையே மீண்டும் பதற்றம் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

இஸ்ரேல் மீது ஏவுகணை மழை

சிறைக் காவலில் காதா் அட்னான் உயிரிழந்ததற்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல் மீது பாலஸ்தீன ஆயுதக் குழுவினா் சரமாரியாக ஏவுகணைகளை வீசி செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடத்தினா்.

காஸா பகுதியிலிருந்து தெற்கு இஸ்ரேலில் மக்கள் நெருக்கம் மிக்க பகுதிகளில் 22 ஏவுகணைகள் வீசப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதில் 25 வயது நபா் படுகாயமடைந்தாா்; மேலும் 2 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

இந்தத் தாக்குதலுக்கு பதிலடியாக, ஆயுதக் குழுவினா் நிலைகளில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

டிஆர்டிஒ-இல் டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

SCROLL FOR NEXT