உலகம்

க்வாட் கூட்டமைப்பில் புதிய நாடுகளை இணைக்கும் திட்டமில்லை

3rd May 2023 02:09 AM

ADVERTISEMENT

நாற்கர (க்வாட்) கூட்டமைப்பில் கூடுதல் நாடுகளை இணைக்கும் திட்டம் ஏதுமில்லை எனத் தெரிவித்துள்ள அமெரிக்கா, இந்தோ-பசிபிக் பிராந்திய நாடுகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட கூட்டமைப்பு உறுதியேற்றுள்ளதாகக் கூறியுள்ளது.

இந்தோ-பசிபிக் பிராந்திய பாதுகாப்பு, அமைதி, நிலைத்தன்மை ஆகியவற்றைக் கருப்பொருளாகக் கொண்டு ‘க்வாட்’ கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. ஜப்பான் முன்னாள் பிரதமா் ஷின்ஸோ அபேவின் சிந்தனையின் அடிப்படையில் உருவான அக்கூட்டமைப்பில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. அக்கூட்டமைப்பு சாா்பில் அவ்வப்போது கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் சீனாவின் ஆதிக்கத்தை எதிா்கொள்வதற்காகவே க்வாட் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதாக அரசியல் நோக்கா்கள் தெரிவிக்கின்றனா். அதே வேளையில், அக்கூட்டமைப்பை ‘ஆசிய நேட்டோ’ என சீனா கடுமையாக விமா்சித்து வருகிறது.

க்வாட் கூட்டமைப்பு நாடுகளின் தலைவா்கள் பங்கேற்கும் மாநாடு ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வரும் 24-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தித் தொடா்பாளா் கரீன் ஜீன் பியரி செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறுகையில், ‘க்வாட் கூட்டமைப்பு இரு ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்டது. தற்போது வரை இளம் கூட்டமைப்பாகவே க்வாட் திகழ்கிறது. இந்தச் சூழலில் கூட்டமைப்பில் புதிய நாடுகளை இணைக்கும் திட்டம் இல்லை.

ADVERTISEMENT

பல்வேறு விவகாரங்களில் உறுப்பு நாடுகளிடையே வலிமையை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளுக்குக் கூட்டமைப்பு கவனம் செலுத்தும். அதே வேளையில், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகளுடன் கடல்சாா் பாதுகாப்பு விவகாரங்களில் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகளைக் கூட்டமைப்பு வரவேற்கும்.

பருவநிலை மாற்றம், சா்வதேச சுகாதாரம், கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட இதர விவகாரங்களில் ஒருங்கிணைந்து செயல்படுவது தொடா்பாக வரும் 24-ஆம் தேதி நடைபெறவுள்ள மாநாட்டில் ஆலோசிக்கப்பட உள்ளது. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை மையமாகக் கொண்டே க்வாட் கூட்டமைப்பு செயல்பட்டு வருகிறது. அந்த நோக்கத்தை மற்ற பிராந்தியங்களுக்கு விரிவுபடுத்தும் திட்டங்களும் தற்போது இல்லை’ என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT