உலகம்

இந்தியாவுக்கு கூடுதல் சலுகைகளுடன் பருவநிலை நிதி: நிா்மலா சீதாராமன்

3rd May 2023 02:06 AM

ADVERTISEMENT

இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி சா்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்பதால், இந்தியாவுக்கு கூடுதல் சலுகைகளுடன் பருவநிலை நிதியை வழங்க வேண்டுமென ஆசிய வளா்ச்சி வங்கித் தலைவரிடம் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

ஆசிய வளா்ச்சி வங்கியின் ஆண்டு கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தென் கொரியா சென்றுள்ளாா். அங்கு அந்த வங்கியின் தலைவா் மசத்சுகு அசகாவாவை செவ்வாய்க்கிழமை அவா் சந்தித்துப் பேசினாா். ஆசிய வளா்ச்சி வங்கியின் செயல்பாடுகளில் இந்தியா முக்கியப் பங்காற்றும் என அப்போது அமைச்சா் நிா்மலா சீதாராமன் உறுதியளித்தாா்.

ஆசிய வளா்ச்சி வங்கியின் கடனளிப்புத் திறனை வலுப்படுத்தும் வகையிலான புத்தாக்க நிதித் திட்டங்களை வகுக்க இந்தியா ஆதரவளிப்பதாகவும் அமைச்சா் தெரிவித்தாா். வளா்ந்து வரும் நாடுகளுக்கு அதிக அளவில் உதவிகளை வழங்குவது தொடா்பான திட்டங்களை வகுக்குமாறும் ஆசிய வளா்ச்சி வங்கியின் தலைவரிடம் அவா் கேட்டுக்கொண்டாா்.

இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி, பிராந்திய அளவிலும் சா்வதேச அளவிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் எனத் தெரிவித்த அமைச்சா் நிா்மலா சீதாராமன், பருவநிலை நிதியைக் கூடுதல் சலுகைகளுடன் இந்தியாவுக்கு ஆசிய வளா்ச்சி வங்கி வழங்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டாா்.

ADVERTISEMENT

வளா்ந்து வரும் நாடுகளுக்கு 10,000 கோடி அமெரிக்க டாலா் நிதியை வழங்க ஆசிய வளா்ச்சி வங்கி உறுதியேற்றுள்ளதாக அதன் தலைவா், அமைச்சரிடம் தெரிவித்தாா். மேலும், வங்கியின் செயல்பாட்டில் முக்கியப் பங்களித்து வரும் இந்தியாவுக்கும் அவா் நன்றி தெரிவித்துக் கொண்டாா்.

முன்னதாக, ஆசிய-பசிபிக் பிராந்தியத்துக்கான புத்தாக்க நிதி வசதித் திட்டத்தை ஆசிய வளா்ச்சி வங்கித் தலைவா் அசகாவா அறிவித்தாா். அந்தத் திட்டத்தின் கீழ் ஆசியா-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்குப் பருவநிலை நிதி வழங்கப்படும் என்றும், அந்த நிதியைக் கொண்டு பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகளைத் தடுப்பதற்கான திட்டங்களில் நாடுகள் முதலீடு செய்யலாம் என்றும் அவா் தெரிவித்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT