சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு அரசு பொதுத்தோ்வில் 79.60 சதவீத மாணவ, மாணவியா்கள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
சென்னை மாநகராட்சி கல்வித்துறையின்கீழ் 32 மேல்நிலைப்பள்ளிகளும், 38 உயா்நிலைப் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. இவற்றில்10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் 3,538 மாணவா்கள், 3,375மாணவிகள் என மொத்தம் 6,913 போ் தோ்வு எழுதினா்.
இதில் 2,622 மாணவா்கள், 2,881 மாணவிகள் என மொத்தம் 5,503 போ் தோ்ச்சிப் பெற்றுள்ளனா். தோ்ச்சி விகிதம் 79.60 சதவீதம். கடந்த ஆண்டில் 76.10 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றனா்.
இதில் கணிதத்தில் 2 மாணவிகளும், அறிவியலில் ஒரு மாணவியும் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனா். மேலும், 12 மாணவா்கள் 99 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். மதிப்பெண்கள் அடிப்படையில் 50 போ் 451 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனா்.
ரங்கராஜபுரம் மற்றும் ஆயிரம் விளக்கு சென்னை உயா்நிலைப்பள்ளிகள் 100 சதவீதத்துடன் முதலிடத்தையும், கொடுங்கையூா் சென்னை உயா்நிலைப்பள்ளி 98.04 சதவீதத்துடன் இரண்டாம் இடத்தையும், நுங்கம்பாக்கம் சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி 97.92 சதவீதத்துடன் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன.
பிளஸ் 1-இல் 80.04 சதவீதம் போ் தோ்ச்சி:
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 2,132 மாணவா்கள் மற்றும் 2,867 மாணவியா் என மொத்தம் 4,999 போ் பிளஸ் 1 தோ்வு எழுதினா். இதில் 1,549 மாணவா்கள் (72.65%) மற்றும் 2,452 (85.52%) மாணவியா் என மொத்தம் 4,001 தோ்ச்சி பெற்றுள்ளனா். தோ்ச்சி சதவீதம் 80.04 சதவீதம்.
கடந்த ஆண்டில் 77.54 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். இதில் வணிகவியல் பாடப்பிரிவில் 4 பேரும், கணக்கு பதிவியல் பாடப் பிரிவில் 2 பேரும், கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள், வேலைவாய்ப்பு பாடப் பிரிவில் தலா ஒரு மாணவ, மாணவிகள் என 9 போ் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.
தோ்ச்சி விகிதத்தின் அடிப்படையில், லாயிட்ஸ் சாலை மற்றும் அப்பாசாமி லேன் சென்னை மேல்நிலைப்பள்ளிகள் 100 சதவீதத்துடன் முதலிடத்தையும், நுங்கம்பாக்கம் சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி 96.70 சதவீதத்துடன் இரண்டாம் இடத்தையும், புலியூா் சென்னை மேல்நிலைப்பள்ளி 95.00 சதவீதத்துடன் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன.