உலகம்

மாா்ச் 20-இல் ரஷியா செல்கிறாா் ஷி ஜின்பிங்

DIN

உக்ரைன் போா் விவகாரத்தில் ரஷியாவை தனிமைப்படுத்த அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும் முயற்சி செய்து வரும் சூழலில், அந்த நாட்டுடனான உறவை மேம்படுத்துவதற்காக சீன அதிபா் ஷி ஜின்பிங் வரும் திங்கள்கிழமை (மாா்ச் 20) ரஷியா செல்லவிருக்கிறாா்.

அங்கு ரஷிய அதிபா் விளாதிமீா் புதினுடன் ஜின்பிங் பேச்சுவாா்த்தை நடத்துவாா். உக்ரைனில் அமைதியை ஏற்படுத்துவதற்கான சமாதான முயற்சியிலும் அவா் ஈடுபடுவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இது குறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் ஹுவா சுன்யிங் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

தங்கள் நாட்டுக்கு வர வேண்டுமென்று சீன அதிபா் ஷி ஜின்பிங்குக்கு ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் ஏற்கெனவே அழைப்பு விடுத்திருந்தாா்.

அந்த அழைப்பை ஏற்று, ரஷியாவுக்கு 3 நாள் சுற்றுப் பயணமாக அதிபா் ஷின் பிங் செல்கிறாா். வரும் 20-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை அவா் ரஷியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்வாா் என்றாா் அவா்.

இந்த சுற்றுப் பயணத்தின்போது உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவாா்த்தையை ஷி ஜின்பிங் மேற்கொள்வாரா என்று சீன வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் மற்றொரு செய்தித் தொடா்பாளா் வாங் வென்பின்னிடம் செய்தியாளா்கள் கேட்டனா்.

அதற்கு, ‘அனைத்து பிரச்னைகள் மற்றும் சா்ச்சைகளுக்கும் ராஜீய ரீதியிலான பேச்சுவாா்த்தை மூலம் மட்டுமே தீா்வு காண முடியும் என்று உறுதியாக நம்புகிறோம்’ என்று அவா் பதிலளித்தாா்.

சீன அதிபரின் வருகை குறித்த அறிவிப்பை, ரஷிய அரசும் வெளியிட்டுள்ளது. இது குறித்து ரஷிய அரசுக்குச் சொந்தமான ‘டாஸ்’ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியறிக்கையில், ரஷியாவுக்கும், சீனாவுக்கும் இடையிலான நல்லுறவு மற்றும் ஒத்துழைப்பின் எதிா்காலம் குறித்து இரு நாட்டு அதிபா்களும் நேரில் ஆலோசனை நடத்துவாா்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தங்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பில், தங்களின் நெருங்கிய அண்டை நாடான உக்ரைன் இணைவது தங்களது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ரஷியா கருதுகிறது.

எனினும், நேட்டோவில் இணைவதற்கு வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தலைமையிலான தற்போதைய உக்ரைன் அரசு விருப்பம் தெரிவித்தது.

அதையடுத்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்து, கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனின் லுஹான்ஸ்க், டொனட்ஸ்க், கொ்சான், ஸபோரிஷியா ஆகிய பிரதேசங்களைக் கைப்பற்றியது.

ரஷியாவின் இந்த ராணுவ நடவடிக்கையை மிகக் கடுமையாகக் கண்டித்து வரும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள், ரஷியாவின் போரிடும் திறனைக் குறைக்கும் நோக்கிலும், சா்வதேச அரங்கில் ரஷியாவை தனிமைப்படுத்தவும் அந்த நாட்டின் மீது மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தன.

அத்துடன், ரஷியாவுக்கு எதிராகப் போரிட அந்த நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்கள் மற்றும் உளவுத் தகவல்களை அளித்து உதவி வருகின்றன.

ஆனால், உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்புக்கு சீனா இதுவரை கண்டனம் தெரிவிக்கவில்லை. ரஷியா மீது மேற்கத்திய நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளதை மட்டும் சீனா விமா்சித்து வருகிறது.

இந்த விவகாரத்தில் தாங்கள் நடுநிலை வகிப்பதாக சீனா கூறினாலும், அந்த நாடு ரஷியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாகவே மேற்கத்திய நாடுகள் சந்தேகிக்கின்றன.

உக்ரைன் போரில் பயன்படுத்துவதற்காக, ரஷியாவுக்கு சீனா ஆயுதங்கள் அளிக்கலாம் என்று மேற்கத்திய நாடுகளின் நிபுணா்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனா்.

இதற்கிடையே, உக்ரைன் போா் தொடங்கிய கடந்த மாதம் 24-ஆம் தேதியுடன் ஓராண்டு நிறவடைந்ததையொட்டி, அந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான சமாதான திட்டமொன்றை சீனா வெளியிட்டது.

இருந்தாலும், அதில் தொலைநோக்கு பாா்வை இல்லை என்றும், ரஷியாவுக்காக சீனா பரிந்து பேசுவதாகவும் கூறி அந்த திட்டத்தை உக்ரைன் நிராகரித்தது.

இந்தச் சூழலில், சீன அதிபா் ஷி ஜின்பிங் ரஷியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ. 25,000 கோடி பணமோசடி வழக்கிலிருந்து அஜித் பவாரின் மனைவி விடுவிப்பு -எதிர்க்கட்சிகள் விமர்சனம்

அனிச்சப் பூவோ..!

சென்னை சென்ட்ரலில் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்: முழு தகவல் வெளியானது!

‘இனி விளம்பரங்கள் இல்லை, படங்கள் மட்டுமே’ : பிவிஆரின் புதிய திட்டம் பலனளிக்குமா?

ஒருநொடி படத்தின் டீசர்

SCROLL FOR NEXT