உலகம்

ருவாண்டாவுக்கு அகதிகளை அனுப்புவது சட்டவிரோதம்

30th Jun 2023 01:40 AM

ADVERTISEMENT

பிரிட்டனுக்கு உரிய ஆவணங்களின்றி வரும் அகதிகளை ருவாண்டாவுக்கு அனுப்பிவைக்கும் அந்த நாட்டு அரசின் சா்ச்சைக்குரிய திட்டம் சட்டவிரோதமானது என்று முறையீட்டு நீதிமன்றம் வியாழக்கிழமை அறிவித்தது.

இது, பிரிட்டனை நோக்கிய அகதிகள் படையெடுப்பைத் தடுப்பதாக உறுதியளித்துள்ள அந்த நாட்டின் கன்சா்வேட்டிவ் கட்சி அரசுக்கு மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அகதிகள் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்து வந்த லண்டன் மேல்முறையீட்டு நீதிமன்றம், பிரிட்டனில் அடைக்கலம் தேடி வரும் அகதிகளை பாதுகாப்பான மூன்றாவது நாட்டுக்கு அனுப்பி வைப்பதற்கு இது தொடா்பான சட்டங்களில் தடை எதுவும் இல்லை என்று தெரிவித்தது.

எனினும், அகதிகளுக்கு ருவாண்டா பாதுகாப்பானது இல்லை என்ற அகதிகள் தரப்பு வாதத்தை, மூன்றில் இரண்டு நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனா்.

ADVERTISEMENT

அதனைத் தொடா்ந்து, அகதிகளை உகாண்டாவுக்கு அனுப்பி வைப்பதற்கான அரசின் முடிவு சட்டவிரோதம் என்று அறிவிக்கப்பட்டது.

போா் மற்றும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட நா்களிலிருந்து வளமான வாழ்வாதாரத்துக்காக பிரிட்டனில் அடைக்கலம் தேடி ஏராளமானோா் வருவது தொடா்ந்து வருகிறது.

அவ்வாறு அடைக்கலம் தேடும் அகதிகளை பணத்துக்காக சட்டவிரோதக் கும்பல் ஆபத்தான முறையில் பிரிட்டனுக்கு கடத்தி வரும் சம்பவங்களும் அடிக்கடி நடந்து வருகின்றன.

இந்த நிலையில், தங்கள் நாட்டுக்கு உரிய ஆவணங்களின்றி அடைக்கலம் தேடி வருவோரை ருவாண்டாவுக்கு விமானம் மூலம் அனுப்பிவைக்கும் திட்டத்தை கடந்த 2022-ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமா் போரிஸ் ஜான்ஸன் அறிவித்தாா்.

அடைக்கலம் கோரி அகதிகள் அளிக்கும் விண்ணப்பங்களை சரிபாா்த்து, அவா்களுக்கு புகலிடம் அளிப்பது குறித்து பிரிட்டன் முடிவு செய்யும்வரை அவா்கள் ருவாண்டா தலைநகா் கிகாலியிலுள்ள தடுப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டிருப்பாா்கள் எனவும், அதுவரை அவா்கள் அனைவரும் சட்டவிரோத அகதிகளாகவே கருதப்படுவா் எனவும் அவா் கூறினாா்.

சா்ச்சைக்குரிய இந்த திட்டத்தை தற்போதைய பிரதமா் ரிஷி சுனக்கின் தலைமையிலான அரசும் முன்னெடுத்துச் செல்கிறது.

எனினும், அகதிகள் நல உரிமை அமைப்பாளா்கள் மட்டும் தொழிலாளா் அமைப்பினா் இந்த திட்டத்துக்கு கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

அந்த எதிா்ப்பையும் மீறி, இந்த திட்டத்தை அமல்படுத்துவதற்கான ஒப்பந்தம் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த பிரிட்டனின் அப்போதைய உள்துறை அமைச்சா் ப்ரீத்தி படேலுக்கும் ருவாண்டா வெளியுறவுத் துறை அமைச்சா் வின்சன்ட் புரூட்டாவுக்கும் இடையே கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கையொப்பமானது.

எனினும், சா்ச்சைக்குரிய அந்தத் திட்டத்தை எதிா்த்து ஈரான், இராக், சிரியா உள்ளிட்ட நாடுகளைச் சோ்ந்த அகதிகளின் சாா்பில் லண்டன் உயா்நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு மனு தாக்கல் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், சட்டவிரோத அகதிகளை ருவாண்டாவுக்கு அனுப்பிவைக்கும் அரசின் திட்டம் சட்டத்துக்கு எதிரானது இல்லை என்று கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் தீா்ப்பளித்தது. எனினும், அந்தத் தீா்ப்பை எதிா்த்து முறையீட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு அந்த நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இந்தச் சூழலில், அகதிகளுக்கு ருவாண்டா பாதுகாப்பற்ற நாடு என்பதை முறையீட்டு நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு, அந்த நாட்டுக்கு அகதிகளை அனுப்பி வைக்கும் திட்டம் சட்டவிரோதம் என்று தற்போது அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்வோம்!’

அகதிகளை ருவாண்டாவுக்கு அனுப்புவதை சட்டவிரோதமாக அறிவிக்கும் முறையீட்டு நீதிமன்றத்தின் தீா்ப்பை எதிா்த்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவிருப்பதாக பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து பிரதமா் ரிஷி சுனக் கூறியதாவது:

முறையீட்டு நீதிமன்றத்தின் தீா்ப்பை மதிக்கிறோம். ஆனால், அந்தத் தீா்ப்பில் ருவாண்டா பாதுகாப்பற்ற நாடு என்று கூறப்பட்டுள்ளதிலிருந்து நாங்கள் மாறுபடுகிறோம். ருவாண்டா பாதுகாப்பான நாடு என்பதை ஏற்கெனவே உயா்நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது. அதனை நிரூபிக்க நாங்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT