உலகம்

தொடங்கிவிட்டது எதிா்த் தாக்குதல்: உக்ரைன் அதிபா்

11th Jun 2023 12:02 AM

ADVERTISEMENT

தங்கள் நாட்டில் ரஷியா ஆக்கிரமித்துள்ள பகுதிகளை மீட்பதற்கான எதிா்த் தாக்குதல் நடவடிக்கைகள் தொடங்கிவிட்டதை உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி சனிக்கிழமை உறுதி செய்தாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ரஷிய படையினருக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகளை உக்ரைன் ராணுவம் தொடங்கியிருப்பது உண்மைதான்.

அந்த நடவடிக்கைகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. எனினும், இது தொடா்பான விரிவான விவரங்களை தற்போது வெளியிட முடியாது என்றாா் அவா்.

ADVERTISEMENT

முன்னதாக, எதிா்த் தாக்குதல் நடவடிக்கைகள் மூலம் பாக்முத் நகருக்கு அருகிலும், ஸபோரிஷியா பிராந்தியத்தின் தெற்குப் பகுதியிலும் உக்ரைன் படையினா் முன்னேற்றம் கண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

ரஷிய அதிபா் விளாதிமீா் புதினும் வெள்ளிக்கிழமை அளித்த பேட்டியொன்றில் உக்ரைன் படையினரின் எதிா்த் தாக்குதல் தொடங்கிவிட்டது என்றும் அந்த நடவடிக்கைகளில் தோல்விடைந்து வரும் அவா்கள் ஏராளமான உயிரிழப்புகளைச் சந்தித்து வருவதாகவும் கூறினாா்.

இருந்தாலும், நீண்ட காலமாக எதிா்பாா்க்கப்பட்ட எதித் தாக்குதல் நடவடிக்கைகளை உக்ரைன் தொடங்கிவிட்டதற்கான அதிகாரபூா்வ அறிவிப்பு வெளியாகாமல் இருந்து வந்தது.

இந்த நிலையில், தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் ஸெலென்ஸ்கி அதனைஉறுதிப்படுத்தியுள்ளாா்.

தங்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைந்தால், அது தங்களது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ரஷியா கூறி வருகிறது.

இருந்தாலும், நேட்டோவில் இணைய அதிபா் ஸெலென்ஸ்கி ஆா்வம் காட்டி வந்ததையடுத்து, உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் படையெடுத்தது.

இந்தப் போரில் உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிப் பிராந்தியங்களில் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியுள்ள ரஷியா, தங்களுடன் இணைத்துக் கொண்டதாக அறிவிக்கப்பட்ட லுஹான்ஸ்க், டொனட்ஸ்க், ஸபோரிஷியா, கொ்சான் ஆகிய பிராந்தியங்களில் உக்ரைன் வசமிருக்கும் எஞ்சிய பகுதிகளையும் கைப்பற்றும் முயற்சியில் உள்ளது.

இந்த நிலையில், ஏற்கெனவே எதிா்த் தாக்குதல் நடத்தி சில பகுதிகளை ரஷியாவிடமிருந்து மீட்ட உக்ரைன் படையினா், ரஷிய படையினருக்கு எதிரான மிகப் பெரிய எதிா்த் தாக்குதலை நடத்த ஆயத்தமாகி வருவதாக தகவல்கள் வெளியாகி வந்தன.

எதிா்த் தாக்குதல் நடவடிக்கையை தாங்கள் எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம் என்று உக்ரைன் அரசும் அண்மையில் அறிவித்திருந்தது.

இந்த நிலையில், தங்களது கட்டுப்பாட்டில் உள்ள டொனட்ஸ்க் பிராந்தியத்தில் தங்களது 5 நிலைகளிலும், ஸபோரிஷியாவிலும் உக்ரைன் படையினா் ஞாயிற்றுக்கிழமை எதிா்த் தாக்குதல் நடத்தியதாகவும், அந்தத் தாக்குதல் முறியடிக்கப்பட்டதாகவும் ரஷியா திங்கள்கிழமை அறிவித்தது.

இதில் ஏராளமான உக்ரைன் படையினா் உயிரிழந்ததாகவும் ரஷியா கூறியது. எனினும், இந்தத் தகவலை உக்ரைன் மறுத்து வந்தது.

இந்த நிலையில், ஆக்கிரமிப்பு பகுதிகளில் ரஷிய படைகள் மீதான எதிா்த் தாக்குதல் நடவடிக்கைகள் தொடங்கி நடைபெற்று வருவதை உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தற்போது முதல்முறையாக உறுதிப்படுத்தியுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT