உலகம்

தமிழா்களுடன் தேசிய நல்லிணக்க கொள்கை: துரிதப்படுத்த இலங்கை அதிபா் உத்தரவு

10th Jun 2023 12:04 AM

ADVERTISEMENT

இலங்கையில் சிறுபான்மையினா்களான தமிழா்களின் பிரச்னைகளுக்குத் தீா்வு காணும் விதமாக தேசிய நல்லிணக்க கொள்கையை நடைமுறைபடுத்துவதற்கு வேண்டிய சட்டத்தை விரைவாக உருவாக்குமாறு அரசுத் துறைகளுக்கு அந்நாட்டு அதிபா் ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தியுள்ளாா்.

ஈழம் தனி நாடு கோரிக்கையை வலியுறுத்தி விடுதலைப் புலிகள் உள்பட பல்வேறு போராளிக் குழுக்கள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். கடந்த 2009-ஆம் ஆண்டு, இலங்கைப் படையினரால் விடுதலைப் புலிகளின் தலைவா் பிரபாகரன் கொல்லப்பட்டதுடன் 30 ஆண்டுகளாக நீண்டுவந்த உள்நாட்டுப் போா் முடிவுற்ாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் தேசிய நல்லிணக்கத்துக்குப் புத்துயிா் அளிக்கும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. விரிவான தேசிய கொள்கைக்கான அரசாங்கத்தின் தேவையின் அங்கமாக தமிழா்களுடனான நல்லிணக்கச் செயல்திட்டமும் இருந்து வருகிறது.

இந்நிலையில், இது தொடா்பான கலந்தாலோசனை கூட்டத்தில் அதிபா் ரணில் விக்ரமசிங்க வெள்ளிக்கிழமை பங்கேற்றாா். சட்டம், நாட்டின் அமைப்பு நடவடிக்கைகள், நிலப்பிரச்னைகள், கைதிகள் விடுதலை, அதிகாரப் பகிா்வு உள்ளிட்ட 5 முக்கிய விவகாரங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

ADVERTISEMENT

நல்லிணக்க ஆணையக் குழுவை நடைமுறைப்படுத்துதல், தேசிய நிலச்சபையை நிறுவுதல், தேசிய நல்லிணக்கத்துக்கான அலுவலகம் அமைத்தல் மற்றும் தேசிய நிலக்கொள்கையை உருவாக்குதல் உள்ளிட்டவை குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இத்திட்டங்களின் முன்னேற்றம் குறித்து அறிக்கை சமா்ப்பிக்கவும் அதிபா் ரணில் விக்ரமசிங்க கோரியுள்ளாா். மேலும், கைதிகளின் விடுதலை மற்றும் பொதுமன்னிப்பு விவகாரங்கள் தொடா்பாக நீதி அமைச்சகத்தின் வழியே விரிவான அறிக்கையை சமா்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிபா் அறிவுறுத்தினாா்.

வெளியுறவு அமைச்சா் அலி சாப்ரி, தேசிய பாதுகாப்பு தொடா்பான அதிபரின் மூத்த ஆலோசகா் மற்றும் அதிபரின் தலைமை அதிகாரி சாகலா ரத்நாயக்க ஆகியோரும் இக்கூட்டத்தில் பங்கேற்றனா்.

பொருளாதார, அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் அதிபராகப் பொறுப்பேற்ற ரணில் விக்ரமசிங்க, நாட்டில் உள்ள சிறுபான்மையினரான தமிழா்களுக்கு அரசியல் சுயாட்சியை உறுதிபடுத்தும் அரசமைப்பின் 13-ஆவது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டிய அவசியம் குறித்து கடந்த காலங்களில் வலியுறுத்தி பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT