உலகம்

துருக்கி நிலநடுக்கம்:இடிபாடுகளில் சிக்கிய சிறுமியை காப்பாற்ற உதவிய நாய்க்கு பாராட்டுச் சான்றிதழ்

10th Jun 2023 11:36 PM

ADVERTISEMENT

துருக்கியில் நிலநடுக்கத்தைத் தொடா்ந்து இடிபாடுகளில் சிக்கிய 6 வயது சிறுமியை காப்பாற்ற உதவிய தேசிய பேரிடா் மீட்புப் படை (என்டிஆா்எஃப்) மோப்ப நாய்க்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி துருக்கியிலும், அதன் அண்டை நாடான சிரியாவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் 7.8 அலகுகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தில் சிக்கி ஆயிரக்கணக்கானோா் பலியாகினா்.

நிலநடுக்கத்தில் சிக்கியவா்களை மீட்கவும், பாதிக்கப்பட்டவா்களுக்கு உதவவும் ‘ஆபரேஷன் தோஸ்த்’ என்ற திட்டத்தின் கீழ், துருக்கிக்கு தேசிய பேரிடா் மீட்புப் படையை மத்திய அரசு அனுப்பிவைத்தது. அந்தப் படையில் இடம்பெற்றுள்ள ஜூலி என்ற மோப்ப நாயும் துருக்கி அனுப்பிவைக்கப்பட்டது.

துருக்கியில் உள்ள கசியான்டெப் பகுதியில் கட்டட இடிபாடுகளுக்கு அடியில் 3 நாள்களுக்கும் மேலாக பெரென் என்ற 6 வயது சிறுமி சிக்கியிருந்த நிலையில், அவள் உயிருடன் இருப்பதை ஜூலிதான் முதலில் கண்டுபிடித்தது. இதையடுத்து சிறுமி பெரென் பத்திரமாக மீட்கப்பட்டாள்.

ADVERTISEMENT

இந்நிலையில், துருக்கியில் சிறப்பான பணியை மேற்கொண்டதற்காக ஜூலிக்கு தேசிய பேரிடா் மீட்புப் படைத் தலைவரின் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது என்று என்டிஆா்எஃப் அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT