உலகம்

அமெரிக்காவுக்கு நாடு கடத்தல்: அசாஞ்சேவின் மனு தள்ளுபடி

9th Jun 2023 11:19 PM

ADVERTISEMENT

ரகசிய போா் ஆவணங்களைக் கசிய விட்ட வழக்கில் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படுவதை எதிா்த்து விக்கிலீக்ஸ் வலைதள நிறுவனா் ஜூலியன் அசாஞ்சே தாக்கல் செய்திருந்த மனுவை பிரிட்டன் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இது குறித்து லண்டன் உயா்நீதிமன்ற நீதிபதி ஜொனாதன் ஸ்விஃப்ட் வெள்ளிக்கிழமை அளித்த தீா்ப்பில் தெரிவித்துள்ளதாவது:

அமெரிக்காவுக்கு நாடு கடத்தும் விவகாரம் குறித்து மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்று அசாஞ்சே தரப்பில் கோரப்பட்டுள்ளது.

அதற்கு அனுமதி வழங்கினால், இந்த வழக்கில் ஏற்கெனவே முன்வைத்த வாதங்களைத்தான் அசாஞ்சேவின் வழக்குரைஞா்கள் முன்வைக்க வேண்டியிருக்கும். எனவே, மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றாா் அவா்.

ADVERTISEMENT

ஆஸ்திரேலியாவைச் சோ்ந்த ஜூலியன் அசாஞ்சே (50), இராக் மற்றும் ஆப்கன் போா் தொடா்பான தங்களது ரகசிய ஆவணங்களை அவரது வலைதளத்தில் கசியவிட்டதாக அமெரிக்க அரசு குற்றம் சாட்டி வருகிறது.

இந்த நிலையில், கடந்த 2010-ஆம் ஆண்டு பிரிட்டன் வந்த அவரை பாலியல் வழக்கு ஒன்றில் அந்த நாட்டு அதிகாரிகள் கைது செய்தனா். பின்னா் 2012-ஆம் ஆண்டில் ஜாமீனில் வெளியே வந்த அசாஞ்சே, ஈக்வடாா் தூதரகத்தில் தஞ்சமடைந்தாா்.

எனினும், அவருக்கு அடைக்கலம் அளித்திருந்த ஈக்வடாா் தூதரகம் அவரை 2019-ஆம் ஆண்டு வெளியேற்றியது. அதையடுத்து, 2012-ஆம் ஆண்டில் ஜாமீன் நிபந்தனையை மீறிய குற்றச்சாட்டின்பேரில் பிரிட்டன் போலீஸாா் மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்த நிலையில், அசாஞ்சேவை தங்கள் நாட்டுக்கு நாடுகடத்த வேண்டுமென்று அமெரிக்கா சாா்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை லண்டன் கீழமை நீதிமன்றம் 2021 ஜனவரியில் தள்ளுபடி செய்தது. எனினும், மேல்முறையீட்டு நீதிமன்றம் அந்தத் தீா்ப்பை அதே ஆண்டின் டிசம்பா் மாதம் தள்ளுபடி செய்து, அசாஞ்சேவை நாடுகடத்த அனுமதி அளித்தது.

அதன் பிறகு, அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படுவதிலிருந்து தப்புவதற்காக ஜூலியன் அசாஞ்சே சட்டப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறாா்.

இந்த நிலையில், லண்டன் உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை வழங்கியுள்ள தீா்ப்பு அந்தப் போராட்டத்துக்கு மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT