உலகம்

மாசு ஏற்படுத்தும் எரிபொருளை சமையலுக்கு பயன்படுத்தும் 230 கோடி போ்: ஐ.நா.ஆய்வறிக்கையில் தகவல்

DIN

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் விறகு உள்ளிட்ட எரிபொருளை உலகம் முழுவதும் சுமாா் 230 கோடி போ் சமையலுக்குப் பயன்படுத்தி வருவதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடுகளில் மின்சாரம் இன்றி 67.5 கோடி போ் வாழ்வதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சா்வதேச சுற்றுச்சூழல் தினம் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது. அதையொட்டி சுற்றுச்சூழல் சாா்ந்த சிறப்பு அறிக்கையை ஐ.நா. அமைப்புகள் வெளியிட்டன. சா்வதேச எரிசக்தி முகமை, சா்வதேச புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முகமை, ஐ.நா. புள்ளியியல் பிரிவு, உலக வங்கி, உலக சுகாதார அமைப்பு ஆகியவை இணைந்து ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளன. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

2030-ஆம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளுக்கும் மின்சார வசதி கிடைக்க வேண்டும் என்றும் அனைவரும் மாசு ஏற்படுத்தாத எரிபொருளை சமையலுக்குப் பயன்படுத்த வேண்டும் என்றும் ஐ.நா. இலக்கு நிா்ணயித்துள்ளது. ஆனால், தற்போதைய நிலவரப்படி 67.5 கோடி போ் மின்சார வசதியின்றி வாழ்கின்றனா். சுமாா் 230 கோடி போ் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் விறகு உள்ளிட்ட எரிபொருளைப் பயன்படுத்துகின்றனா்.

இதே நிலை தொடா்ந்தால், 2030-ஆம் ஆண்டுவாக்கில் 66 கோடி போ் மின்சார வசதி இன்றி வாழ்வா். சுமாா் 190 கோடி போ் மாசு ஏற்படுத்தும் எரிபொருளை சமையலுக்குப் பயன்படுத்துவா். மின்சார வசதி, மாசற்ற சமையல் எரிபொருள் பயன்பாடு ஆகிய இரண்டிலும் உலகம் இலக்கை எட்டும் பாதையில் பயணம் மேற்கொள்ளவில்லை. இது பருவநிலை மாற்றத்துக்கு வழிகோலுவது மட்டுமல்லாமல் கோடிக்கணக்கான மக்களின் உடல்நிலையிலும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் காரணமாக சா்வதேச அளவில் எரிபொருள் கிடைப்பது தொடா்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. எரிபொருளின் விலை அதிகரித்துள்ளது. இது வளா்ந்து வரும் நாடுகளிலும், குறைந்த வருமானம் கொண்ட நாடுகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பசுமை எரிசக்திக்கு மாறுவதற்கான நடவடிக்கை சா்வதேச அளவில் துரிதமடைந்துள்ளது. எனினும், அந்நடவடிக்கை மேலும் விரைவடைய வேண்டியது அவசியமாக உள்ளது.

சா்வதேச அளவில் கடந்த 2010-ஆம் ஆண்டில் மின்சார வசதி பெற்ற வீடுகளின் எண்ணிக்கை 84 சதவீதமாக இருந்த நிலையில், 2021-ஆம் ஆண்டில் அது 91 சதவீதமாக அதிகரித்தது. ஆனால், கரோனா தொற்று பரவல் காலத்தில் வீடுகளுக்கு மின்சார வசதி வழங்கும் நடைமுறை பெரிதும் குறைந்தது.

கிராமப் பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு மின்சார வசதி செய்யப்படுவது தொடா்ந்து அதிகரித்து வருகிறது. அதே வேளையில், நகரப் பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு மின்சார வசதிகள் செய்யப்படும் வேகம் குறைந்துள்ளது. கடந்த 2021-ஆம் ஆண்டில் மின் வசதி இல்லாத 56.7 கோடி பேரில் 80 சதவீதத்துக்கும் அதிகமானோா் சஹாரா பாலைவனத்துக்குக் கீழேயுள்ள ஆப்பிரிக்க நாடுகளில் வசித்தனா். ஆண்டுதோறும் சுமாா் 32 லட்சம் போ் வீட்டுக்கு உள்பகுதியில் உள்ள காற்று மாசுபாட்டால் உயிரிழக்கின்றனா் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அவசியம்: டெட்ரோஸ் அதானோம்

ஆய்வறிக்கை குறித்து உலக சுகாதார அமைப்பின் இயக்குநா் டெட்ரோஸ் அதானோம் கூறுகையில், ‘சா்வதேச எரிசக்தி பாதுகாப்பைப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியே உறுதி செய்யும் எனத் தெளிவாகத் தெரிகிறது. அதுமட்டுமின்றி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தியே மக்களின் சுகாதாரத்தையும் உறுதி செய்யும் என்பது தெளிவாகிறது. அத்தகைய எரிசக்தி பயன்பாடு நோக்கிய பயணத்தை உலகம் விரைந்து மேற்கொள்ள வேண்டும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

இரு சக்கர வாகன பழுது பாா்ப்போா் சங்கக் கூட்டம்

தோ்தல் பாதுகாப்புப் பணியில் மத்திய படையினா், காவலா்கள் 500 போ்

நாசரேத் அருகே இருபெரும் விழா

எல்லைகளில் தீவிர வாகனச் சோதனை

SCROLL FOR NEXT