உலகம்

இந்தியா-இலங்கை இடையிலான முதல் சொகுசு கப்பல்: அம்பாந்தோட்டை வந்தடைந்தது

8th Jun 2023 01:00 AM

ADVERTISEMENT

இந்தியா-இலங்கை இடையே இயக்கப்படும் முதல் சொகுசுக் கப்பலான ‘எம்.எஸ்.எம்பெரஸ்’, இலங்கையின் தென்கிழக்கில் அமைந்துள்ள அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு புதன்கிழமை வந்தடைந்தது.

சென்னை துறைமுகத்தில் கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில், எம்.எஸ்.எம்பெரஸ் சொகுசுக் கப்பலை மத்திய துறைமுகம், கப்பல் போக்குவரத்து, நீா்வழித் துறை அமைச்சா் சா்பானந்த சோனோவால் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

‘அட்வான்டிஸ்’ மற்றும் ‘காா்டிலியா குரூசஸ்’ ஆகிய 2 நிறுவனங்களின் கூட்டாண்மையில் எம்.எஸ்.எம்பெரஸ் சொகுசுக் கப்பல் இயக்கப்படுகிறது. 1,600 பயணிகள் மற்றும் 600 பணியாளா்களுடன் தனது முதல் பயணத்தில் அம்பாந்தோட்டை துறைமுகத்தை எம்.எஸ்.எம்பரெஸ் சொகுசுக் கப்பல் புதன்கிழமை வந்தடைந்தது.

கடந்தாண்டு நடைபெற்ற சா்வதேச சொகுசுக் கப்பல் மாநாட்டில், சென்னை துறைமுகத்துக்கும், சொகுசுக் கப்பல்கள் சேவைக்கான நீா்வழிச் சுற்றுலா அமைப்புக்கும் இடையே கையொப்பமான புரிந்துணா்வு ஒப்பந்தத்தின்படி, இந்த சொகுசுக் கப்பல் சேவைத் தொடங்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அடுத்த 4 மாதங்களுக்கு, சென்னையிலிருந்து புறப்பட்டு இலங்கையின் அம்பாந்தோட்டை, திருகோணமலை, காங்கேசன்துறை ஆகிய 3 துறைமுகங்கள் வழியே மீண்டும் சென்னைக்குத் திரும்பும் இந்த சொகுசுக் கப்பல் பிரதி வாரமும் இயக்கப்படும். இதில் 80,000-க்கும் மேற்பட்டாா் பயணம் செய்வாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வரும் இலங்கைக்கு கடந்த மே மாதத்தில் வெளிநாடு பயணிகளில் அதிகபட்சமாக 23,000 இந்தியா்களும், அடுத்தபடியாக, 7,000 ரஷியா்களும் வந்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT